ஒரு புறம் சீனா; ஒரு புறம் பாக்.; எல்லைகளில் நிகழ்ந்த அசம்பாவிதம் குறித்து முப்படைகளின் தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை...!

டெல்லி: இந்தியா- சீனா எல்லை சரியாக நிர்ணயிக்கப்படாததால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே, 3 ஆண்டுகளுக்குப்பிறகு, கடந்த மே மாதம் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இரு நாட்டு ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சுமார் 6 வாரங்களாக லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது.

இதில் இரு நாட்டு வீரர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.இந்திய, சீன படையினர் இடையே நடந்த மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் பலியாயினர். இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீன படையில் பலி மற்றும் படுகாயம் அடைந்தோர் சேர்த்து 43 பேர் என கூறப்படுகிறது. மோதலில் உயிர்பலி ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இரு நாடுகளுக்கு இடையே முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

சீனா எல்லை பிரச்சனை ஒருபக்கம் இருக்க ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை அருகே வெடிபொருட்களுடன் பறந்த பாகிஸ்தானுக்கு சொந்தமான டிரோனை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள்.  ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், கதுவா மாவட்டத்தில் உள்ள ரதுவா கிராமத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினர் அதிகாலை 5.10 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி டிரோன் ஒன்று பறப்பதை கண்டனர். இதனால், உஷாரான வீரர்கள், டிரோனை சுட்டு வீழ்த்தினர். இந்திய எல்லைக்குள் 250 மீட்டர் தூரத்தில்  டிரோன் விழுந்தது.

அதை சோதனை செய்ததில் அதில் அதிநவீன துப்பாக்கி, 7 கையெறி குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் போன்றவை நிரப்பப்பட்டு இருந்தன. இந்த டிரோன், பாகிஸ்தான் பகுதியில் உள்ள ராணுவம் அல்லது தீவிரவாதிகள் முகாமில் இருந்து இயக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், சீன எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், பாகிஸ்தானுடனான எல்லைப் பாதுகாப்பு குறித்தும் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் விமானம், ராணுவம், கப்பல் ஆகிய முப்படை தளபதிகளுடன் பங்கேற்றுள்ளார். முப்படை தளபதிகளுடனான ஆலோசனை முடிந்தும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Stories:

>