×

கொரோனா ஊரடங்கால் கொடியிலேயே வாடி கருகும் ஆத்தூர் வெற்றிலை

ஆறுமுகநேரி:  கொரோனா ஊரடங்கால் வெளி மாநிலங்களுக்கு வெற்றிலை அனுப்ப முடியாததால் ஆத்தூரில் வெற்றிலை விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. வருமானமின்றி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் சுற்றுவட்டார கிராமங்களான ராஜபதி, சொக்கபழக்கரை, மரந்தலை, வெள்ளக்கோவில், மேலஆத்தூர், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், வாழவல்லான், கொற்கை, உமரிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய விவசாய தொழிலாக விவசாயிகள் வெற்றிலை பயிரிட்டு வருகின்றனர். வெற்றிலை கொடி பயிர் என்பதால் இங்குள்ள கொடிக்கால்களில் 4 தலைமுறைக்கு மேலாக சுமார் 300 ஏக்கரில் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிலை விவசாயம் நடந்து வருகிறது. ஒரு ஏக்கருக்கு 100 கன்னிகள் என பிரிக்கப்படுகிறது. வெற்றிலை பயிரிட்டு உற்பத்தி, பராமரிப்பு, விற்பனை என மூன்றாக பிரித்து செலவுகள் செய்கின்றனர். முதலில் உற்பத்தி காலம் 60 நாட்கள். இதற்காக நிலங்களில் கான்கள் தோண்டி முதலில் அகத்தி முருங்கை மர விதைகளை ஊன்றுகின்றனர். இதற்கு கான்களில் தேங்கி கிடக்கின்ற தண்ணீரை ஒருநாள் விட்டு ஒருநாள் இறைக்கின்றனர். 60 நாட்கள் கழித்து வெற்றிலைக் கொடியை நட்டி முருங்கை, அகத்தி மரத்தில் படர விடுகின்றனர்.

இரண்டாவது 5 மாதம் பராமரிப்பு காலமாகும். அப்போது ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மேலும் கொடி படர தினமும் பராமரிக்க வேண்டும். 5 மாதம் சென்ற பின்பு தான் விவசாயிகள் வெற்றிலை பறிக்கின்றனர்.
மூன்றாவது விற்பனை காலம். இதில் ஒரு வெற்றிலை கொடிக்காலுக்கு தண்ணீர் நன்றாக கிடைக்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கு இரண்டரை ஆண்டுகள் வரை பலன் தரும். அறுவடை செய்யப்படும் வெற்றிலையை விவசாயிகள் வெற்றிலை சங்கத்தின் மூலம் பல மாநிலங்கள், மாவட்டங்களுக்கு விற்பனை செய்கின்றனர். வெற்றிலை சக்கை, மாத்து, பயிர்ராசி, முதுகால்ராசி, பயிர்சாதா, பொடி என தரம் பிரிக்கப்படுகிறது. இதில் முதல் ரகமான சக்கை மற்றும் மாத்து ரக வெற்றிலைகள் டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. பொடி வெற்றிலை ரகங்கள் நெல்ைல, தூத்துக்குடி, மதுரை, நாகர்கோவில் உள்பட பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. உமரிக்காடு, ஆத்தூர் உட்பட பல இடங்களில் வெற்றிலை சங்கங்கள் இருந்தாலும் வெளிமார்க்கெட்டுக்கு அனுப்பப்படும் வெற்றிலை விலையை தலைமையிடமாக செயல்படும் தெற்கு ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கம் தான் நிர்ணயம் செய்கிறது.

கடந்த ஆண்டுகளில் ஒரு நாளைக்கு 3.5 டன் முதல் 5 டன் வரை வெற்றிலை ஆத்தூர் வட்டார சங்கத்தின் மூலம் பஸ், ரயில் மூலம் வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ ரூ.200 முதல் 250 வரை விற்பனை செய்யப்பட்டது. இறை வழிபாட்டிற்கும், திருமணம் உள்ளிட்ட  சுப நிகழ்ச்சிகளில் வெற்றிலை தவறாமல்  இடம் பெறுகிறது. சுப  நிகழ்ச்சிக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பாக்கு, பணம் வைத்து  அழைக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. விருந்தோம்பலுக்குபின் வெற்றிலை, பாக்கு  கொடுத்து வழியனுப்பும் வழக்கம் உள்ளது.  இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் மார்ச் 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தியது. கோயில்களில் வழிபாட்டிற்கு பக்தர்கள் இதுவரை அனுமதிக்கப்படாததாலும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் குறைந்த எண்ணிக்கையில் உறவினர்களை வைத்து மட்டும் நடத்துவதாலும் கடந்த 3 மாதங்களாக வெற்றிலை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 3 மாதங்களாக உரிய போக்குவரத்து வசதி இல்லாததால் வெளி மாநிலம், மாவட்டங்களுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் வெற்றிலையை பறிக்காமல் விவசாயிகள் கொடியிலேயே விட்டு விட்டனர். ஊரடங்கிற்கு முன்பு நல்ல விலைக்கு சென்ற வெற்றிலை தற்போது கொடியிலேயே வாடி வதங்கி வருகிறது. இதனால் தற்போது வெற்றிலை கிலோவிற்கு ரூ.60 முதல் 70 வரை என வீழ்ச்சி கண்டுள்ளது.  மேலும் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு ஒரு நாளைக்கு 250 முதல் 400 கிலோ வரை மட்டுமே அனுப்பப்படுகிறது. விவசாயிகள் பறிக்காமல் விட்டு விட்டதால் கொடியிலேயே வெற்றிலை முற்றி காய்ந்து வருகிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.10 லட்சம் வரை விவசாயிகளுக்கு  இழப்பீடு ஏற்பட்டுள்ளது. வருமானமின்றி விவசாயிகளும், வேலையின்றி தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு வெற்றிலை விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையும், தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடனை தள்ளுபடி செய்யவேண்டும்

இதுகுறித்து ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கத் தலைவர் சதீஸ்குமார் கூறுகையில், ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் சுமார் 900 வெற்றிலை விவசாயிகள் உள்ளனர். இந்தத் தொழிலின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரம் குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர். தற்போது ஊரடங்கால் வெற்றிலை விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு இதுவரை எந்த மானியமும் வழங்கவில்லை. மேலும் வெற்றிலை விவசாயிகளுக்கு மானிய கடன் எந்த வங்கியிலும் கிடையாது. வெற்றிலை விவசாயத்தை பொறுத்தவரை சிறு, குறு விவசாயிகள் மட்டுமே உள்ளனர்.  பணப்பயிரில் வெற்றிலை உள்ளதால் விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.  வெற்றிலை பறிப்பு இல்லாததால் தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். எனவே வெற்றிலை விவசாயிகளை காப்பாற்ற இழப்பீடு தொகையும், தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், நிவாரண தொகையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

வெற்றிலையின் மகத்துவம்
குழந்தைகளுக்கு சளி தொல்லைக்கும், நுரையீரல், கீழ்வாத வலி, அஜீரண கோளாறுகள், சிறுநீர் பெருக்கம், தொண்டை வலி, இடுப்பு வலி, மூச்சுதிணறல், இழைப்பு, சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு சிறந்த மூலிகையாக வெற்றிலை பயன்படுகிறது. தாய்ப்பால் சுரக்கவும், பெண்களின் குழந்தையின்மை தன்மைக்கு இதன் வேர்ப்பகுதி பயன்படுகிறது. பூச்சு, ஜந்துக்களின் விஷம் முறிவுக்கு இரண்டு வெற்றிலையுடன் மிளகும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் விஷம் இறங்கிவிடும். சிறந்த வலி நிவாரணியாகவும் வெற்றிலை பயன்படுகிறது. கபசுரக் குடிநீரில் வெற்றிலையின் பங்கு முக்கியமானதாகும். வெற்றிலை கொடி பயிர் என்பதால் இங்குள்ள கொடிக்கால்களில் 4 தலைமுறைக்கு மேலாக சுமார் 300 ஏக்கரில் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிலை விவசாயம் நடந்து வருகிறது.

Tags : Attur vaitu , Attur vaitu, korona curling, wreath
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக...