×

விளையாட்டு அரங்கத்தை வழங்க தயார்: கொரோனாவுக்காக மாணவர் விடுதியை தர அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு: 1,300 படுக்கையுடன் கோவிட் கேர் மையம்: மாநகராட்சி தகவல்

சென்னை: கொரோனா சிகிச்சை மையத்துக்காக மாணவர் விடுதியை தர முடியாது என்று அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில்,   விளையாட்டு அரங்கத்தை வழங்கத் தயார் என்று அண்ணா பல்கலைக் கழகம் தரப்பில் பதில்  அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் 1300 படுக்கை வசதி கொண்ட கோவிட் கேர் மையம் அமைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து சிறப்பு அதிகாரி மற்றும் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டாலும் வடசென்னை பகுதிகளில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி சென்னையில் 38,327 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதன்படி ராயபுரம் மண்டலத்தில்- 5,981 பேர், தண்டையார்பேட்டை-4,869, தேனாம்பேட்டை-4,652, கோடம்பாக்கம்-4,149 திரு.வி.க.நகர்-3,356, அண்ணாநகர்-3,972, அடையாறு-2,204, வளசரவாக்கம்-1,638, திருவொற்றியூர்-1,434, அம்பத்தூர்-1,374, மாதவரம்-1046, ஆலந்தூர்-808, பெருங்குடி-762, சோழிங்கநல்லூர்-723, மணலியில் 547 பேர், மற்ற மாவட்டத்தை சேர்ந்த 812 பேர் என இதுவரை 38,327 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்கள் போன்றவைகளை கொரோனா மையமாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி தங்க வைப்பதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் விடுதிகளை வரும் 20ம் தேதிக்குள் மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, சென்னை மாநகராட்சிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், கொரோனா சிகிச்சைக்கு மாணவர் விடுதிக்குப் பதில் ஆடிட்டோரியம் மற்றும் 300 படுக்கை வசதி உள்ள மேலும் இரண்டு புதிய கட்டடங்களை தரத் தயார் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாணவர் விடுதியில், மாணவர்களின் உடமைகள் இருப்பதால், அதனை காலி செய்து கொடுப்பது சிரமம் என்பதால், விளையாட்டரங்கத்தை அளிக்க தயாராக இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் விடுதியில் தனித்தனி அறைகள் இருப்பதால் அதை கொடுத்தால் வசதியாக இருக்கும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று மாநகராட்சி பணிகள் துறை துணை ஆணையர் குமரவேல் பாண்டியன், கட்டிடத் துறை செயற் பொறியாளர் முருகன் ஆகியோர் அண்ணா பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 1300 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் கேர் மையம் அமைக்கப்படவுள்ளது. ஏற்கனவே 600 படுகைக்கள் தயார் செய்துள்ள நிலையில் மேலும் 700 படுக்கைகள் தயார் செய்யப்படும் விரைவில் பயன்பாட்டிற்கும் வரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : sports stadium ,Anna University Grants Student Hostel for Corona Refusal ,Corona ,Anna University ,Student Hostel , Sports Stadium, Corona, Student Hostel, Anna University
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்