×

கொரோனா வைரஸ் பரவல் பீதி: தலைமை செயலக ஊழியர்கள் 25% பேர் மட்டுமே பணிக்கு வருகை: சாவு எண்ணிக்கை அதிகரிப்பதால் அச்சம்

சென்னை: கொரோனா வைரஸ் பீதி காரணமாக தலைமை செயலகத்துக்கு 25 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பலி அதிகரித்து வருவதால் ஊழியர்கள் ஒருவித அச்சத்துடனே காணப்படுகிறார்கள். சென்னையில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினசரி 1000ஐ தாண்டிய நிலையில், தற்போது 1,500ஐ நெருங்குகிறது. மேலும், கடந்த சில நாட்களாக கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் மரணம் அடைவது சென்னையில் மட்டும் தினசரி 40ஐ தொடுகிறது. அதுவும் 35, 40, 50 வயதுடையவர்களும் கொரோனா தொற்றுக்கு மரணம் அடையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்திற்கு தினசரி 3,500 பணியாளர்கள் வேலைக்கு வந்தனர். அவர்களின் பலருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று பாதிக்கும் நிலை ஏற்பட்டது. கடந்த வார இறுதியில் மட்டும் தலைமை செயலக ஊழியர்கள் 150க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் தற்போதும். இதையடுத்து அனைத்து தலைமை செயலக ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் முதல்வரின் அலுவலகத்தில் பணிபுரியும் தனி செயலாளர் தாமோதரன் கொரோனா வால் பாதிக்கப்பட்டு  மரணம் அடைந்தார். இதையடுத்து முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் 2 உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு, அவர்களும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பின்னர் முதல்வர் அலுவலகத்தில் உள்ள 45 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உள்துறை அலுவலகத்திலும் துணை செயலாளர் உள்ளிட்ட 3 பேருக்கு 2 நாட்களுக்கு முன் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுபோன்று தொடர் சம்பவங்களால் தலைமை செயலக ஊழியர்கள் அச்சத்துடனே பணிக்கு வந்து செல்கிறார்கள். தற்போதுகூட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று முன்தினம் (19ம் தேதி) முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுக்கு பதில் 33 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், நேற்று முன்தினம் முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் 25 சதவீத ஊழியர்கள் மட்டுமே தலைமை செயலகத்துக்கு வந்து பணிகளை செய்தனர். மற்றவர்கள் கொரோனா பீதி காரணமாக பணிக்கு வரவில்லை. நேற்று சனிக்கிழமை அலுவலக நாளாக இருந்தாலும் மிக குறைந்த எண்ணிக்கையில் தான் பணியாளர்கள் வேலைக்கு வந்தனர்.

தலைமை செயலகத்தில் அதிகளவில் கொரோனா பாதிப்புக்கு ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கூறியதாவது: தலைமை செயலகத்தில் சுமார் 6 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். மிகவும் குறுகலான அலுவலகத்தில் இவர்கள் நெருக்கமாக உட்கார்ந்து பணியாற்றும் நிலை உள்ளது. ஒரு துறையில் பார்க்கப்படும் பைல்கள் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மேஜைக்கு சென்று திரும்பும் நிலை உள்ளது. இதுவும் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஒரு காரணமாக இருக்கலாம். இங்குள்ள 10 மாடி கட்டிடத்தில் உள்ள அலுவலகங்களுக்கு செல்ல ஊழியர்கள், லிப்ட் பயன்படுத்துகிறார்கள். அதில் ஒரே நேரத்தில் அதிகம் பேர் மிகவும் நெருக்கமாக நின்று செல்லும் நிலை உள்ளது. தலைமை செயலகத்தில் வேலை செய்யும் பலர் கொரோனா அதிகம் பரவி உள்ள ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில் இருந்துதான் பணிக்கு வந்து செல்கிறார்கள். இதனால் யாருக்கு வைரஸ் தொற்று இருக்கிறது என்பதே எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. தொற்று உள்ளவர்கள் மற்றவர்களிடம் சகஜமாக பேசி பழகும்போது அடுத்தவர்களுக்கும் பரவி விடுகிறது.

தற்போது முதல்வரின் அலுவலகத்திலேயே அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூத்த அமைச்சர் அன்பழகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளே பயத்தில் தலைமை செயலகம் வருவதில்லை. ஆரம்பத்தில் கொரோனா வந்து சிகிச்சை பெற்றவர்கள் எளிதில் குணமாகி வீடு திரும்பும் நிலை இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இது எங்களிடம் அதிக பயத்தை ஏற்படுத்தியுள்ளது. துறை அதிகாரிகள் கண்டிப்பாக வேலைக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே பணிக்கு வர அனுமதிக்க வேண்டும். நாங்கள் விடுமுறை எடுத்த நாட்களையும் வேலை நாட்களாக கருத வேண்டும் என்றனர்.

Tags : Coronavirus outbreak panic ,25% ,Chief Secretariat staff ,Corona , Corona, Chief Secretariat staff, 25% attendance
× RELATED தனியார் பொறியியல் கல்லூரிகளில்...