×

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: சிஐஎஸ்எப் வீரர்கள் 7 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை நிர்வாக அலுவலகத்தில் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருந்ததால், அவர்கள் பணியாற்றிய அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் நிர்வாக அலுவலகம் சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ளது. இங்கு, பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு நேற்று முன்தினம்  மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் உடனடியாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதோடு, அவர்களுடன் பணியிலிருந்த மேலும் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடக்கிறது. மேலும் அந்த அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகளில் விமான நிலைய சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த 7 பேர் அமர்ந்து பணியாற்றிய அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : soldiers corona ,CISF ,airport ,Chennai , Madras, CISF Players, Corona
× RELATED தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து...