×

முதலிடத்தில் இருந்து 6வது இடத்துக்கு மாறிய திருவிக நகர் மண்டலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியது எப்படி?: அதிகாரிகள் தகவல்

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி திருவிக நகர்  மண்டலத்தில் புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், ஓட்டேரி, கொளத்தூர்,  பெரம்பூர் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இந்த மண்டலத்திற்கு உட்பட்ட கொளத்தூர் பகுதியில், டெல்லிக்கு சென்று திரும்பியவர்களால் முதன்முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்களை தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியில் தொடங்கிய நோய் தொற்று படிப்படியாக அதிகரித்தது. புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியில் ஒரே தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அந்த தெருவே காலியானது. சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த பகுதியில் முகாமிட்டு, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பலர் அதை அலட்சியப்படுத்தியதால், கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்தது.

சென்னையில், ஆரம்பத்தில் ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்கள் தான் நோய் தொற்றில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் இருந்தன. இந்நிலையில், சில நாட்களில் திருவிக நகர் மண்டலம் முதல் இடத்தை பிடித்தது.  இதையடுத்து, தமிழக அரசு சார்பில் திருவிக நகர் மண்டலத்திற்கு சிறப்பு அதிகாரியாக அருண் தம்பிராஜ் ஐஏஎஸ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அருணா, இணை இயக்குனர் கிருஷ்ணராஜ், சிபிசிஐடி எஸ்பி ஜெயலட்சுமி  ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.  இவர்கள் தலைமையில் மண்டல அதிகாரி நாராயணன், செயற்பொறியாளர்கள் செந்தில்நாதன், நாச்சான், ஆஷாலதா ஆகியோர் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் மக்கள் வெளியே வர தடை, நோய் தொற்று உள்ளவர்  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி தருவதற்கு  தன்னார்வளர்கள் நியமனம், கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், குடிநீர் பிடிக்க மக்கள் சில இடங்களில் வெளியே வர வேண்டிய நிலை இருந்தது. அங்கு  லாரிகள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து,  பெரிய  பைப் மூலம் வீட்டிற்குள்ளேயே சப்ளை செய்யப்பட்டது. லாரிகள் செல்ல முடியாத இடங்களுக்கு  களப்பணியாளர்கள் தண்ணீர் சப்ளை செய்தனர். மேலும், ரேஷன் கிட்  என்ற நடைமுறைப்படி அங்குள்ள வீடுகளுக்கு நேரில் சென்று அத்தியாவசிய பொருள், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தொடர்ந்து, தனியாக ஒரு கால்சென்டர் உருவாக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் தேவைகளை கேட்டறிந்து, அதனை விரைந்து நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வருவது முற்றிலும் குறைக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை தொடர்புகொண்டு கவுன்சலிங் வழங்கப்படுகிறது,’’ என்றனர். இவ்வாறு ஊழியர்களின் தொடர் முயற்சியினாலும், அதிகாரிகள் களத்தில் இறங்கி நேரடியாக களப்பணியாற்றியதன்   விளைவாக திருவிக நகர் மண்டலம் கொரோனா பாதித்தவர்களின்  எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்து படிப்படியாக குறைந்து  தற்போது 6வது  இடத்தில் உள்ளது.

  புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ் ஆகிய பகுதிகளில் நோய் தொற்றை கட்டுப்படுத்தி விட்டாலும்  ஓட்டேரி பெரும் சவாலாக இருந்து வருகிறது. அந்த பகுதியில் நாள்தோறும் தினமும் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இதனால், அங்கு முழுமூச்சில் களப்பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த இடைப்பட்ட வேளையில் களப்பணி ஆற்றிய 6 பேருக்கு திருவிக நகர் மண்டலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உயர் அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

‘நோ மீட்டிங்’
சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி  அதிகாரிகளுக்கு தனித்தனியாக பணிகள் பிரிக்கப்பட்டு, இதற்கென வாட்ஸ்அப்  குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அதில் ஒவ்வொரு ஏரியாவாக பிரிக்கப்பட்டு, நோய்  தொற்று ஏற்பட்ட நபர் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், எப்போது  வீடு திரும்புகிறார், அவர்களது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாதா  போன்ற விவரங்கள் அனைத்தும் பகிரப்பட்டது. வாட்ஸ்அப் குழுக்களில்  களப்பணியாளர்கள்  முதல் உயரதிகாரிகள் வரை தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொண்டதால் ஆலோசனை  என்ற பெயரில் அடிக்கடி மீட்டிங் வைப்பது முற்றிலும் குறைக்கப்பட்டது.

ஊதியத்துடன் விடுப்பு
திருவிக நகர் மண்டலம் 77வது வார்டில் அதிகபட்சமாக  324 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டதால், அந்த வார்டை  முற்றிலும்  தனிமைப்படுத்தி, வீடு வீடாக பிளீச்சிங் பவுடர் கொடுத்து சுத்தம் செய்ய  செய்தனர். அந்த பகுதியில் துப்புரவு பணியாளர்கள் அதிகளவில் வேலை செய்வது  தெரிந்ததால், அவர்கள் அனைவரையும் வேலைக்கு வர வேண்டாம் எனக்கூறி,  சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்தனர்.



Tags : shift ,Trivik Nagar Zone , Trivik Nagar Zone shift,number,sixth?
× RELATED திகில் கதையில் மம்மூட்டி