கொரோனாவால் மருத்துவமனைகள் நிராகரிப்பு: மஞ்சள் காமாலையால் உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றிய போட்டோ தெரபி: விஞ்ஞானி உறவினர் செய்த சாதனை

புதுடெல்லி: உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை, கொரோனா பரவும் அச்சத்தால் மருத்துவமனைகள் அனுமதிக்க மறுத்ததால் போட்டோ தெரபி சிகிச்சை முறை தக்க சமயத்தில் காப்பாற்றியது. டெல்லியை சேர்ந்த தம்பதி சுமித் - கேசவி சக்சேனா. இவர்களுக்கு கடந்த 9ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த ஒரு வாரத்தில் அதற்கு மஞ்சள் காமாலை தாக்கி, கண்கள், உடல் முழுக்க மஞ்சள் நிறமாக மாறியது. குழந்தை நோயால் துடித்தது. பல மருத்துவமனைகளுக்கு குழந்தையை தூக்கி சென்றனர். ஆனால், எந்த மருத்துவமனையும் குழந்தையை அனுமதிக்க மறுத்துவிட்டன. குழந்தைக்கு ‘பில்லிரூபின்’ ஆசிட் உடல் முழுக்க பரவி விட்டது. அதனால்தான் அதிகமாக மஞ்சள் நிறமாகிவிட்டது என்று கூறினர். வழக்கமாக இது போன்ற சில சிகிச்சைகளுக்கு போட்டோதெரபி சிகிச்சை முறை பின்பற்றுவதுண்டு என்றும் கூறினர்.

தம்பதிகள் அழுது புலம்பினர். குழந்தையின் மாமா கானவ் கஹோல். இவர் ஒரு விஞ்ஞானி. அமெரிக்காவில் படித்தவர். அரிசோனா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் இருந்துள்ளார். அவர் போட்டோ தெரபி பற்றி கேள்விப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இந்த சிகிச்சை முறை பிரபலமாக உள்ளது என்றும் தெரிந்து கொண்டார். சிலரிடம் பேசி சில தகவல்களை பெற்றார். மீன் தொட்டிகளில் பயன்படுத்தும், மீன் காப்பகங்களில் போடப்படும் வயர்லெஸ் எல்இடி விளக்குகளை பயன்படுத்தி சிகிச்சை தரலாம்; வயர்லெஸ் முறையில் டிஐஒய் என்ற நவீன தொழில்நுட்பத்தில் எல்இடி விளக்குகளுக்கு மின்சாரம் தரலாம் என்று உறுதி செய்து கொண்டார். உடனே வீட்டில் தனி அறையில் அதற்கான ஏற்பாடுகளை செய்தார். எல்இடி விளக்குகளுக்கு டிஐஒய் தொழிநுட்ப முறையில் வயர்லெஸ் இணைப்பு தந்தார். வயர்லெஸ் மூலம் மின்சாரம் பெற, எஸ்டி கார்டை பயன்படுத்தினார்.

இதன் பின் குழந்தை கண்களை மட்டும் பாதுகாப்பாக மறைத்து விட்டு, எல்இடி விளக்கு கதிர்களை பாய்ச்சினார். சில நிமிடங்களில் நல்ல பலன் கிடைக்க ஆரம்பித்தது. தம்பதிகளுக்கு நிம்மதி பெருமூச்சு அப்போதுதான் வந்தது. 2 நாள் தொடர்ந்து இப்படி எல்இடி மூலம் போட்டோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டபின், குழந்தைக்கு பழையபடி உடலில் மஞ்சள் நிறம் வெகுவாக குறைந்து விட்டது என்று கானவ் தெரிவித்தார்.

Related Stories:

>