×

பெங்களூரு அணியில் பிரேசில் வீரர்

பெங்களூரு: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் களமிறங்கும் பெங்களூரு எப்சி அணியில் பிரேசில் வீரர் கிளெய்டன் சில்வா இணைந்துள்ளார். கொரோனா பீதி காரணமாக ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 7வது சீசன் எப்போது தொடங்கும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும், முன்னாள் சாம்பியனான பெங்களூரு எப்சி அணி களமிறங்க முழுவீச்சில் ஆயத்தமாகி வருகிறது. அந்த அணிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த முன்கள ஆட்டக்காரர் கிளெய்டன் சில்வா (33) ஓராண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் பிரேசிலின் மதுரேரா,  தாய்லாந்தின் ஒசோட்ஸ்பா, போலீஸ் டெரோ, முவாங்தோங் யுனைடட், சியாங்கிராய் யுனைடட்,  மெக்சிகோவின் டெல்ஃபைன்ஸ், சீனாவின் ஷாங்காய் ஷென்சின் ஆகிய பிரபல கால்பந்து கிளப்களுக்காக களம் கண்டுள்ளார். கடந்த ஓராண்டாக தாய்லாந்தின்  சுபன்புரி கிளப்புக்காக விளையாடி வந்தவரை, பெங்களூரு அணி நேற்று ஒப்பந்தம்  செய்தது. சில்வா 2008ம் ஆண்டு முதல் தொழில்முறை ஆட்டக்காரராக விளையாடி வருகிறார்.

தாய்லாந்து கிளப்புகளுக்காக 100 கோல்களுக்கு மேல் அடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமைக்கும் இவர் சொந்தக்காரர். பெங்களூரு அணியின் பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ராட், ‘சில்வா அணியில் இணைவது முக்கியமான நிகழ்வாகும். அதன் மூலம் அணி பலம் பெறும். அவருடன் பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இப்போது பிரேசிலில் இருக்கும் சில்வா, ‘சாம்பியன் அணியுடன் இணைவதின் மூலம் கிளப்பையும், ரசிகர்களையும் மகிழ்விக்க விரும்புகிறேன். பெங்களூரு செல்லும் நாளுக்காக காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : player ,Brazil ,team ,Bangalore , Brazil player , Bangalore team
× RELATED ஐசிசியின் பிப்ரவரி மாதத்திற்கான...