×

இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க கூடாது; கார்கில் போல் லடாக்கில் பாடம் புகட்ட வேண்டும்; 1962ல் இருந்த இந்தியா இல்லை என்பதை பாகிஸ்தான் போல சீனாவும் உணர வேண்டும்: ராணுவ அதிகாரிகள் தரப்பில் ஆவேச கருத்து

புதுடெல்லி: லடாக்கில் தொடர்ந்து சீனா சீண்டி வருகிறது. 1962 போல சும்மா இருக்க மாட்டோம் என்று அதற்கு பாடம் புகட்ட வேண்டும்; கார்கில் பகுதியில் 1999ல் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டியது போல சீனாவுக்கும் பதிலடி தர வேண்டிய காலம் நெருங்கி விட்டது. அரசியல் முடிவு எடுத்தால் ராணுவம் தயார் என்று ராணுவத்தில் சில அதிகாரிகள் தரப்பில் ஆவேச கருத்து எதிரொலித்துள்ளது. லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரை இந்தியா - சீனா இடையே 3448 கிமீ நீள எல்லை விரிந்துள்ளது. இந்த எல்லையில், இரு நாடுகளும் தனது ராணுவத்தை நிறுத்தி கண்காணித்து வருகின்றன. லடாக் பகுதியின் கிழக்கில் சில இடங்களில் தீர்க்கப்படாத பிரச்னை உள்ளது. அதனால் அங்கு இரு தரப்பும் கண்காணிக்கலாம். ஆனால், சீன ராணும் அவ்வப்போது சிறிய அளவில் ஊடுருவல் நடத்தி வருகிறது. உடனே இந்திய ராணுவம் எதிர்ப்பு காட்டியபின் வாபஸ் பெறுகிறது. இருந்தாலும், உறைபனி பகுதிகளில் சீனா திடீரென உட்புகுந்து, ஆட்டம் காண்பிக்கிறது.

இதுதெரியவந்ததும் இந்திய ராணுவம் எதிர்ப்பை காட்டி திருப்பி அனுப்பி வருகிறது. அதிகாரிகள் தலையிட்டால் தான் அவ்வப்போது பிரச்னை தீர்கிறது. அருணாச்சல் பிரதேசத்திலும் இப்படி சீன ஹெலிகாப்டர் வந்து மீண்டும் எல்லை தாண்டி செல்வதை இந்திய ராணுவம் பார்த்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை திடீரென சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதனால் நிலைகுலைந்த இந்திய ராணுவம் அவசர அவசரமாக முகாம்களில் இருந்து படையை அனுப்பியது. எதிர்தாக்குதல் நடத்தாமல் சமாதானமாய் எவ்வளவோ சொல்லிப்பார்த்தனர் அதிகாரிகள். இது குறித்து ஏற்கனவே பேச்சு நடந்த போது, இந்த பகுதியில் மோதி கொள்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. எனினும், திங்களன்று திடீர் தாக்குதல் நடத்தியதால் இந்திய ராணுவம் அதிர்ந்தது. உயர் அதிகாரிகள் தரப்பில் உத்தரவு வந்தபின், பதிலடி தரத்துவங்கியது. இதில் சீன தரப்பில் 45 வீரர்கள் இறந்தனர் என்று தகவல் தெரிவித்தது. இந்திய தரப்பில் தமிழக வீரர் பழனி உட்பட 20 பேர் இறந்தனர். உடனடியாக லடாக்கில் இந்தியா தன் விமானப்படையை அதிகரித்தது. இன்னொரு பக்கம் சர்வதேச கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, சீனாவும் சமாதான பேச்சுக்கு அழைத்தது.

இதனால் சீனா தன் ராணுவத்தை எல்லையில் இருந்து வாபஸ் பெற ஆரம்பித்தது. ‘இந்தியா தான் எங்கள் பகுதியில் ஊடுருவியது’ என்று சீனா அபாண்டமாய் கூறியது. இது தொடர்பாக பிரதமர் மோடி  வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விளக்கினார். ‘இந்திய எல்லையில் சீன ராணுவம் நுழையவில்லை; ஒரு அங்குலம் கூட அவர்கள் பறிக்க முடியாது’ என்று சொன்னார். ஆனால், பிரதமர் மோடியின் வார்த்தைகளை நம்பமுடியவில்லை; 45 ஆண்டுக்கு பின் அதிக உயிர்சேதத்தை சீனா ஏற்படுத்தியுள்ளது. உண்மையை விளக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கூறினார். இந்த நிலையில், ராணுவ தரப்பிலும், சீனாவை இந்த முறை விடக்கூடாது; 1962 போல இல்லை நாம் என்பதை காட்ட வேண்டும்’ என்று ஒரு தரப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர் தரப்பில் வெளிவந்த தகவல்கள்: லடாக்கில் மட்டுமல்ல, அருணாச்சல் பிரதேசத்திலும் சீனா சீண்டி வருகிறது. சர்வதேச எல்லை கோட்டை மதிக்காமல் இப்படி செய்வது சீனா திட்டமிட்டு செய்வதை போல தெரிகிறது. 1962ல் நம்மிடம் போதிய விமானப்படை பலம் இல்லை. அதனால் சீனா அப்போது ஊடுருவலை செய்தது.

இப்போது நாம் அப்படி இல்லை; நம் பலம் சீனாவுக்கு ஈடாக இல்லை என்றாலும், தக்க பதிடி கொடுக்கும் திறமை நம் ராணுவத்திடம் உள்ளது. லடாக்கில் கல்வான் பகுதியில் கடந்த திங்கள் அன்று போர் சூழ்நிலை போல சீனா தாக்குதல் நடத்தியுள்ளது. ஒப்பந்தத்தை மீறாமல் இந்தியா கண்காணித்து வரும் போது, திடீரென தாக்குதல் நடத்தியது ஒப்பந்தத்தை மீறிய செயல். இதற்கு நாமும் பதிலடி கொடுத்தாலும் அது போதாது. நாமும் பலம் வாய்ந்தவர்கள். துரத்தினால் புறமுதுகு காட்டி பின்வாங்கி விட மாட்டோம் என்று அவர்களுக்கு காட்ட வேண்டும். நம் கைகளை ஒப்பந்தம் என்ற பெயரில் கட்டியிருப்பதால் அமைதியாக கண்காணித்து வருகிறோம். இனியும் நாம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க தேவையில்லை. பாகிஸ்தான் கொட்டத்தை நாம் அடக்கியிருக்கிறோம். சீனா எல்லையில், லடாக், கல்வான் பள்ளத்தாக்கு, தவுலத் பெக் ஓல்டி, டேப்சாங், சவுஷல் ஆகிய கிழக்கு பகுதிகளை நோக்கி சீன ராணுவம் தன் விமானப்படை கண்காணிப்பை அதிகரித்துள்ளது.

இப்போது நாம் வடக்கு பகுதியில் நம் விமானப்படையை நிறுத்தி கண்காணித்து வருகிறோம். பி - 81 போன்ற ஆயுதம் தாங்கிய பெரிய போர் விமானம், ரேடார்கள், ட்ரோன்கள் என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது போல கிழக்கிலும் கவனம் செலுத்த வேண்டும். மேலும், டி 72 ரக டாங்குகள், நவீன தளவாடங்கள், சுகோய் போன்ற போர் விமானங்கள், பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகளை நாம் வைத்துள்ளோம். இதையும் சீனா எல்லையில் நிறுத்த வேண்டும். நம் பலத்தை அவர்களுக்கு காட்ட வேண்டும். பாகிஸ்தானுக்கு கார்கில் போர் மூலம் நாம் பாடம் புகட்டி விட்டோம்.

அதுபோல, சீனாவுக்கும் நம் பலத்தை நிரூபித்து, சிறிய அளவில் தாக்குதல் நடத்தி, சட்டவிரோத ஊடுருவல் பகுதியில் இருந்து அவர்களை வலுக்கட்டாயாக பின்வாங்க செய்ய வைக்க வேண்டும். இது தொடர்பாக அரசியல், பொருளாதார, வர்த்தக விஷயங்களை சீர்தூக்கி பார்த்து, திடமான முடிவை அரசியல் தலைமை தான் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் ராணுவம் எந்த நேரத்திலும் முழு வேகத்துடன் சீனாவுக்கு பதிலடி கொடுத்து எல்லை தாண்டாமல் முற்றுப்புள்ளி வைக்க முடியும். இது தான் ராணுவத்தின் ஒரு தரப்பு அதிகாரிகளிடம் இருந்து வெளிவந்துள்ள கருத்துகள்.

சீனாவுக்கு ஈடு தரலாம்

* லடாக் - அருணாச்சல் இடையே உள்ள 3448 கிமீ நீள எல்லையை சீனாவின் டபிள்யு.டி.ஓ. என்ற 5வது மிகப்பெரிய ராணுவ பிரிவுதான் கண்காணிக்கிறது.
* கிழக்கு பகுதிகள் உறை பனி மிகுந்தது; அதில் சீனாவுக்கு சற்று சாதகமான வசதிகள் உள்ளன. அதேசமயம், மேற்கு பகுதியில் இந்தியா , சீனாவை சமாளிக்க முடியும்.
* ராணுவம், 3 விமானப்படை தளபதிகள் தலைமையில் உள்ள பிரிவுகளை சீன எல்லையில் நிறுத்தினால் சீனாவுக்கு சற்று அலர்ஜி ஏற்படும்.
* இந்தியா - சீனா இரண்டுமே அதிகபட்சம் 2 லட்சம் ராணுவ வீரர்களை எல்லையில் குவிக்க முடியும். அதற்கு மேலும் நம்மால் குவிக்க முடியும்.
* திபெத்தை ஒட்டி 58,000 கிமீ நீளத்துக்கு ரயில் பாதையை போட்டு வருகிறது  சீனா. இப்ேபாது இந்தியாைவ பயமுறுத்த 14 இடங்களில் விமானப்படை தளங்களை அமைத்துள்ளது சீனா. இந்த ரயில் பாதை வந்து விட்டால் சீனா 30 விமானப்படை தளங்களை அமைக்க முடியும்.
* இப்படி தன் பலத்தை திட்டமிட்டு எல்லையில் அதிகரித்து வருகிறது சீனா. நாம் விழித்து கொள்ள வேண்டும்; சிக்கிம் வரை கூட வாலாட்ட அனுமதிக்க கூடாது.

Tags : Kargil ,Pakistan ,Ladakh ,China ,India , India, China, military officials, angry opinion
× RELATED லடாக்கில் லேசான நிலநடுக்கம்