×

மருத்துவப் படிப்பு 27 சதவீதம் ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் என்பது பெரிய மோசடி அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை : பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:  மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் சார்பில், மருத்துவக் கல்விக்கான உதவித் தலைமை இயக்குனர் மருத்துவர் சீனிவாஸ் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால்,  மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீடு என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பின்  அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அதில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு வாய்ப்பே இல்லை. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.அதுமட்டுமின்றி, அகில இந்திய தொகுப்புக்கான இடங்களுக்கு கலந்தாய்வு முடிவடைந்து மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும், குறிப்பிட்ட காலத்திற்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்ய வேண்டியிருப்பதாலும் நடப்பாண்டில் இட ஒதுக்கீடு வழங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கோரி உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனிகுமாரி வழக்கில்,‘‘மாநிலங்களில் இருந்து பெறப்படும் இடங்களுக்கு மாநில வாரியான இட ஒதுக்கீட்டை, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்த  தயாராக உள்ளோம்’ என்று பதில் மனு தாக்கல் செய்திருப்பதாக சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கான நிபந்தனைகள் கடுமையானவை அநீதியானவை.மாநில அளவிலான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினாலும் கூட ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டை தாண்டக் கூடாது. அதன்படி பார்த்தால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும்.

இந்த ஆபத்தான திட்டத்தை, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு 27 சதவீதத்துக்கும் கூடுதலாக 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளாது என்பதை நன்றாக அறிந்து கொண்டு, அந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு தான் இது.இரண்டாவதாக, சலோனி குமாரி வழக்கில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டால், அதை செயல்படுத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தாமாக முன்வந்து இட ஒதுக்கீடு வழங்க தயாராக இல்லை என்பது தான் இதன் பொருளாகும்.


Tags : Central Government , Medical Seats ,Central government ,Anbumani ,PMK
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.....