×

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா: நீலகிரி மாவட்டமும் தப்பவில்லை

கோவை: ெகாரோனா தொற்று குறைவாக இருந்த கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் கொரோன வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை  மாவட்டத்தில் கொரோன தொற்று குறைந்து பச்சை மண்டலத்திற்கு மாறிய நிலையில் தற்போது நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் பகுதியை சேர்ந்த இளைஞர் கொரோனாவுக்கு உயிரிழந்ததை அடுத்து அப்பகுதியில் தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூரில் மட்டும் சுமார்  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் நேற்று கோவையில்  பாதிக்கப்பட்டோர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டது. இதில், ெகாரோனாவுக்கு  உயிரிழந்த ஆர்.ஜி.புதூர் நபரின் தொடர்புடையவர்களில் 23 வயதுடைய மூன்று  ஆண்கள், 28 வயது ஆண், 8 வயது சிறுவன், 9 வயது சிறுவன் மற்றும் 29 வயது ஆண்  என 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல பீளமேடு பகுதியை  சேர்ந்த 98 வயது மூதாட்டி கண் ஆபரேஷன் செய்ய தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இது தவிர, சென்னை கோயம்மேடு பகுதியில் இருந்து கோவைக்கு வந்த தீத்திப்பாளையம்  சேர்ந்த 28 வயது பேராசிரியர், ராஜவீதியை சேர்ந்த 45 வயது ஆண், கொரோனா  நோயாளியுடன் தொடர்பில் இருந்த சிறுமுகையை சேர்ந்த 70 வயது பெண், காரமடை சேர்ந்த 50 வயது பெண், 18 வயது ஆண், சொக்கம்புதூரை சேர்ந்த 28 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில்  மொத்தம் 10 ஆண்கள், 4 பெண்கள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்த ஆர்.ஜி.புதூர் நபரின் தொடர்புடையவர்களில் மட்டும் கடந்த 4 நாட்களில் 30 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பலரின்  முடிவுகள் இன்னும் வரவில்லை. இதனால் கோவை மாவட்டம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவை கடுமையாக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும் கொரோனா பாதித்த பகுதிகளில் சுகாதாரப்பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஈரோடு: ஈரோட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதையடுத்து சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று 100க்கும் மேற்பட்டோர்களுக்கு பரிசோதனை செய்துள்ளனர். ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்த கால்டாக்ஸி டிரைவர் ஒருவர் சமீபத்தில் சென்னை சென்று வந்தார். வாடகைக்காக இ-பாஸ் பெற்று சென்று வந்த நிலையில், அந்த டிரைவரை உடனடியாக தனிமைப்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததன் விளைவாக  டிரைவரிடமிருந்து 20 வயதான கர்ப்பிணி மனைவிக்கு கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து, சுகாதாரத்துறையினர் கணவரை பரிசோதித்தபோது ஏற்கனவே நோய் தொற்று வந்து சென்றதும், உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தவில்லை என்றும் தெரியவந்தது. இந்நிலையில், கால்டாக்ஸி டிரைவரின் பக்கத்து வீட்டை சேர்ந்த 50 வயது பெண்ணிக்கு கொரோனா உறுதியானது. அந்த பெண் நடத்தி வரும் மெஸ்சில் சாப்பிட்டு வந்த ஒரு ஆணுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட கால்டாக்ஸி டிரைவரின் மனைவி வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லாத நிலையில், பக்கத்து வீட்டில் மெஸ்  நடத்தி வரும் பெண்ணிக்கு நோய் தொற்று  எப்படி ஏற்பட்டது? என தெரியவில்லை. மேலும், அப்பெண்ணின் வீட்டில் கணவர், 2  மகன்களுக்கு எவ்வித பாதிப்பும்  ஏற்படவில்லை. ஆனால், அந்த மெஸ்சில்  சாப்பிட வந்த தொழிலாளிக்கு தொற்று  உறுதியாகி உள்ளது. மெஸ் நடத்தி வரும் பெண் மற்றும் தொழிலாளி ஆகிய  இருவரும் எங்கெல்லாம் சென்றுள்ளனர்? என  விசாரித்தபோது, அகத்தியர் வீதி,  கீரைக்கார வீதி, மொய்தீன் வீதி,  கருங்கல்பாளையம், மூலப்பட்டறை, கச்சேரி  வீதி என பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அப்பகுதியில் வீடு வீடாக  சென்று 100க்கும் மேற்பட்டோரின் சளி மாதிரிகளை  ஆய்வுக்காக  சுகாதாரத்துறையினர் எடுத்து சென்றுள்ளனர். இதில், 60 பேரின்  முடிவுகள்  வந்த பிறகுதான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தெரியவரும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில்  வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களால்  மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று 108  ஆம்புலன்சு மருத்துவ உதவியாளர் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி  செய்யப்பட்டுள்ளது.

22 வயதான ஆம்புலன்சு மருத்துவ உதவியாளர்  மங்கலம்  பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார். கடந்த வாரம்  தனது சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு சென்று வந்துள்ளார். இதன்பின்னர்  அவரின் சளி  மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு  கொரோனா தொற்று  இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. ஆண்டிபாளையம்  குளத்துப்புதூரை சேர்ந்த 30 வயது ஆண் சென்னையில் நடந்த  உறவினர்  திருமணத்திற்கு காரில் தனது குடும்பத்துடன் சென்று வந்துள்ளார்.   திருப்பூருக்கு வந்த அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது

உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது. நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி  நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேலும்  6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 18ம் தேதி 4  நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டு மொத்தம் 26 நபர்கள்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதில் மேல் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 30 வயது ஆண், குன்னூர் சப்ளை  டிப்போ பகுதியை சேர்ந்த 36 வயது பெண் ஆகியோர் சென்னையை சேர்ந்தவர்கள். இவர்கள்  விமானம் மூலம்  கோவை வந்து பின்னர் பஸ்சில் குன்னூரில் உள்ள உறவினர்  வீட்டிற்கு  வந்துள்ளனர். இவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 6 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி குளிச்சோலை பகுதியில் இருந்து ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 22 வயது நபர் மூலம் 5 வயது சிறுமி, 16 வயது பெண் ஆகியோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

ஊட்டி   நகராட்சிக்குட்பட்ட காந்தல் கீழ் போகி தெருவை சேர்ந்தவர் 22 வயது பெண்.   இவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்துள்ளார். இவருக்கு விமான   நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் மூலம் கீழ் போகி தெருவை சேர்ந்த 20 வயது பெண், 55 வயது ஆண், 47 வயது பெண் ஆகியோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Corona ,Nilgiris ,Coimbatore ,Erode ,Tirupur , Coimbatore, Erode, Tirupur, fast spreading corona, Nilgiris
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...