×

மதுரையில் கொரோனா பரவலை தடுக்க சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் சோதனை : அதிகாரிகளின் கிடுக்கிப்பிடியால் வாகன ஓட்டிகள் கலக்கம்

மதுரை: மதுரையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்டத்தின் இரண்டு எல்லைகளில் ‘செக்போஸ்ட்கள்’ அமைத்து 24 மணி நேர தொடர் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகளின் இந்த கிடுக்கிப்பிடி சோதனையால், இ.பாஸ் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளனர்.தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் தென்மாவட்டங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். வெளியூர்காரர்கள் வருகையால் மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் எகிறி வருகிறது. எனவே, உரிய அனுமதியின்றி மதுரைக்குள் நுழைகிற வாகனங்கள், மாவட்டத்தில் கொட்டாம்பட்டி மற்றும் வாடிப்பட்டி பகுதிகளில் உள்ள இரண்டு எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வருவாய்த்துறையினர், போலீசார், சுகாதாரத்துறையினர் ஆகியோரின் முழு கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இந்த எல்லை சோதனை சாவடி பகுதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.மதுரை கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் பிரான்பட்டி விலக்கு பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில், சப்-கலெக்டர் 3 பேர், மேலூர் தாசில்தார் சிவகாமிநாதன் தலைமையில் வருவாய்த்துறையினர் ஒரு குழுவாக உள்ளனர். 2 இன்ஸ்பெக்டர்கள், ஒரு எஸ்ஐ, 6 ஆயுதப்படை போலீசார் கொண்ட குழுவினருடன், கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி மருத்துவமனை டாக்டர்கள் குழு, மருத்துவக்குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரமும் 3 ஷிப்ட்களில் நாளொன்றுக்கு ஆயிரத்து 500க்கும் அதிக வாகனங்களை இவர்கள் சோதனை செய்து அனுப்பி வைத்து வருகின்றனர். இதேபோல், வாடிப்பட்டி அருகே உள்ள பாண்டியராஜபுரத்தில் மற்றொரு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இங்கும் வருவாய்த்துறையினர், போலீசார், சுகாதாரத்துறையினர் தலா 15 பேர் குழுவாக, 24 மணி நேர கண்காணிப்பில் உள்ளனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர்வாகனங்களுக்கான இ-பாஸ்கள், அது போலியா, முகவரி சரியானதா என சோதனையிடுகின்றனர். கார் ஓட்டுநருக்கு மட்டும் ‘காய்ச்சல்’ பார்க்கப்படுகிறது. அதேநேரம் மகாராஷ்டிரா, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நோய்த்தொற்று பகுதிகளில் இருந்து வருவோரை, சோதனைச் சாவடி மையம் அருகே உள்ள பள்ளிக்கு அனுப்பி, ‘ரத்த மாதிரி’ எடுக்கப்பட்டு, முழு முகவரி பெற்று முத்திரை குத்தி அங்கு தங்க வைக்கப்படுகின்றனர். எல்லைச் சோதனைச் சாவடிகளில், அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி சோதனையால், வெளியூர்களிலிருந்து மதுரைக்கு வரும் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளனர்.



Tags : inspection ,Madurai ,checkpoints ,testing ,motorists , 24 hour ,testing ,checkpoints , corona ,Madurai,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...