×

திருப்பத்தூர் அருகே 100 ஆண்டு பழமை வாய்ந்த கிணற்றை தூர்வாரிய பொதுமக்கள்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 100 ஆண்டு பழமை வாய்ந்த கிணற்றை பொதுமக்கள் நேற்று தூர்வாரினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கந்திலி, குரிசிலாப்பட்டு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது கோடைக்காலம் என்பதால் நிலத்தடி நீர் வறண்டு காணப்படுகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீருக்காக தவித்து வருகின்றனர். இதேபோல், திருப்பத்தூர் காக்கணம்பாளையம் ஊராட்சியில் நிலத்தடி நீர் வறண்டுள்ளது. இங்குள்ள பொதுமக்களும் தற்போது குடிநீர் இன்றி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இங்கு ஊருக்கு மத்தியில் உள்ள 100 ஆண்டு பழமையான 200 அடி ஆழ பொது கிணறு உள்ளது.

 இந்த கிணற்றில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதி மக்கள் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த கிணறு சேறும், சகதியுமாக பயன்பாடின்றி உள்ளது. எனவே இந்த கிணற்றை தூர்வாரி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் கிணற்றுக்குள் இறங்கி நேற்று தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிணற்றில் இருந்த சேற்றினை அகற்றினர். இதையடுத்து, கிணற்றில் தண்ணீர் ஊற்று வரத்தொடங்கி உள்ளது.  இதனை கண்ட அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், ஊராட்சி நிர்வாகம் இந்த கிணற்றை ஆழப்படுத்தி தூர்வாரி நிரந்தரமாக எங்கள் பகுதி குடிநீர் பிரச்னைைய தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.



Tags : Tirupathur Near Tirupathur , Tirupathur 100 year old ,well
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை