சென்னிமலை: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கொடுமணல் கிராமத்தில் சுமார் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால் பல கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வந்தது. தற்போது, தமிழக தொல்லியல் துறையின் திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் தலைமையில் உதவி தொல்லியலாளர் நந்தகுமார் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கொடுமணலில் கடந்த ஒரு மாதமாக அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில், சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்படுத்திய கல்லறைகள் மற்றும் கருவிகள், அணிகலன்கள் தயார் செய்த தொழிற்சாலைகள் இருந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தொல்லியல் துறை திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:இந்த அகழாய்வு பணியில் சுமார் 250 இடங்களில் கல்லறைகள் (பெருங்கற்கால ஈமச்சின்னம்) இருந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு கல்லறையை சுற்றிலும் பெரிய அளவிலான கற்கள் வட்டமாக வைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு கல்லறையை நாங்கள் தோண்டி ஆய்வு செய்தபோது 6 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் மற்றும் 1 மீட்டர் ஆழத்தில் முற்றத்துடன் கூடிய 2 அறைகளாக பிரிக்கப்பட்டு இருந்தது.
இந்த கல்லறையில் இறந்தவரின் உடலை எரித்த பின்பு அந்த எலும்புகளை ஒரு அறையிலும், மற்றொரு அறையில் இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை மட்டுமே வைத்துள்ளனர். இந்த கல்லறையின் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் பெரிய அளவிலான கற்களை நட்டு வைத்துள்ளனர். இந்த ஒரு கல்லறை மட்டும் முக்கிய நபர் இறந்த கல்லறையாக இருக்கலாம். இதன் அருகில் ஈமச்சடங்கு செய்ய வைத்திருந்த 10 மண்பானை மண்ணில் புதைந்து காணப்படுகிறது. மற்றொரு இடத்தில் அகழாய்வு செய்தபோது அங்கு கருவிகள், அணிகலன்கள் தயார் செய்வதற்காக கொல்லுப்பட்டறைகள் இயங்கியதற்கான அடையாளம் உள்ளது. இங்கு செப்பு, இரும்பு ஆகியவற்றை உருக்கி எடுத்ததற்கான அடையாளமும் காணப்பட்டது.
2 பச்சைக்கற்கள், சிறிய அளவிலான 2 தங்க துண்டு, உடைந்த மண்பானைகள், பாசிமணிகள் மற்றும் விலங்கு ஒன்றின் தலைப்பகுதி எலும்பு ஆகியவை கிடைத்துள்ளது. கல்லறைகளும், கொல்லுப்பட்டறைகளும் சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களால் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். அகழாய்வு பணியை முழுமையாக செய்யும்போது இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.