×

மத்திய சிறை கைதிகளின் மனஅழுத்தம் போக்கும் ‘வீடியோ கால்’ பேச்சு அனைத்து சிறைகளுக்கும் மிகவும் அவசியம்

* தினமும் 2 ஆயிரம் பேர் பேசி மகிழ்கிறார்கள்
* குமுறலுக்கு முற்றுப்புள்ளி வைத்த கொரோனா

சேலம்: கொரோனா ஊரடங்கு நேரத்தில் மனஅழுத்தம் போக்கும் வகையில், உறவினர்களுடன் வீடியோ காலில் கைதிகள் பேசி வருகின்றனர். தமிழகத்தில் மத்திய சிறைகளுக்கு மட்டும் செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாடு மாவட்டம், கிளை என்று அனைத்து சிறைகளுக்கும் மிகவும் அவசியம் என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிர் கொல்லி நோயான கொரோனாவால், சிறைக்கைதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் சற்று மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. வழக்குகளில் கைதாகி சிறையில் இருப்பவர்களை பார்க்க உறவினர்கள் செல்வார்கள். அதற்கான மனுவை எழுதி, கைதியை  பார்க்க அதற்கான அறைக்கு செல்ல வேண்டும். குறைந்தது 10 கைதிகளை அந்த அறைக்கு அழைத்து வருவார்கள். அவர்களின் உறவினர்கள் 20 பேர் நிற்பார்கள். அதன்பிறகு அங்கு நடக்கும் காட்சி அனைவரையும் கண்கலங்க செய்யும். கைதிக்கும், உறவினர்களுக்கும் இடையில் 10 அடி இடைவெளியில் கம்பி வலை போடப்பட்டிருக்கும். ஒரு பகுதியில் கைதிகளும், இன்னொரு பகுதியில் உறவினர்களும் நின்று நலம் விசாரிப்பார்கள். யார் என்ன பேசுகிறார்கள்?  என்பது யாருக்கும் தெரியாது. 30 பேர் ஒரே நேரத்தில் கத்தி கத்தி பேசுவார்கள். இறுதியில் நா வறண்டு வெளியே வருவார்கள். என்ன  சொல்ல வந்தோம் என்பதை மறந்து, கைதியை பார்த்த மகிழ்ச்சியில் திரும்பி செல்வார்கள். ஒவ்வொரு முறையும் இதே நிலை தான்.

இந்த காட்சியை மாற்ற எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்தாலும், அது வெற்றி பெறவில்லை. இறுதியில் கொரோனா என்ற கொடிய நோய், கைதிகளின் குமுறலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.  உலகநாடுகளை ஆட்டிப்படைத்து, சுதந்திரமாக சுற்றுபவர்களை அலற வைத்த கொரோனா, சிறை கைதிகளை தனி அறையில் அமரவைத்து, குடும்பத்தினருடன் உரையாட வழிவகுத்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் கைதிகள், அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் செல்போன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலையடுத்து, சிறைக்கு நேரடியாக வந்தால் மற்ற கைதிகளுக்கு நோய் பரவி விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை புழல், கோவை, மதுரை, வேலூர், பாளையங்கோட்டை, திருச்சி, சேலம், கடலூர் ஆகிய மத்திய சிறைகளில் இப்படி செல்போன் வீடியோ காலில்  பேசும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மத்திய சிறையிலும் 10 செல்போன்கள் வாங்கப்பட்டுள்ளது. தினமும் அவர்கள்  7 நிமிடம் பேசி வருகிறார்கள். இதன்படி ஒவ்வொரு நாளும் சுமார் 2ஆயிரம் கைதிகள் உறவினர்களுடன் பேசி மகிழ்கின்றனர். ஒரு கைதி, தான் யாருடன் பேச வேண்டும் என்பதற்கான செல்போன் எண்ணை சிறை அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும். வாரத்திற்கு 3 நாட்கள் விசாரணை கைதிகளுக்கும், 2 நாட்கள் குண்டர் தடுப்புசட்ட கைதிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 அதன்படி குறிப்பிட்ட நாளில் வீடியோ காலில் சிறையில் இருந்து அழைக்கப்படும். அப்போது மனைவி மற்றும் குடும்பத்தினரை வீடியோவில் பார்த்துக்கொண்டே  பேசி மகிழ்கின்றனர். சிறைக்கு சென்று பேசமுடியாமல் திரும்பி வருவதை காட்டிலும் இது மகிழ்ச்சியளிப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் எங்களின் மன அழுத்தம் நீங்குவதாகவும் தெரிவித்தனர். அதே நேரத்தில் மத்திய சிறைகளில் மட்டும் இருக்கும் வீடியோ காலில் பேசும் வசதியை, மாவட்ட மற்றும் கிளைச்சிறைகளிலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனால், அந்த சிறைகளில் அடைபட்டு கிடக்கும் நூற்றுக்கணக்கான கைதிகளின் மனஅழுத்தம் குறையும் என்பதே இதற்கு காரணம்.  இது குறித்து சட்டம் மற்றும் உளவியல் வல்லுநர்கள் கூறியதாவது: கொரோனா ஊரடங்கால் தற்போது நீதிமன்ற பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகள் மட்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால்  கிளைச்சிறைகளில் இருக்கும் கைதிகளுக்கு ஜாமீன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் குடும்பத்தினரை பார்க்க முடியாமல் தவித்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் கைது செய்யப்படும் கைதிகள், கோரன்டைன் சிறையான மாவட்ட மற்றும் கிளைச்சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்.  இவர்கள் மத்திய சிறைகளுக்கு அனுப்பப்படுவது இல்லை.

மத்திய சிறைகளில் இருக்கும் கைதிகள், உறவினர்களுடன் செல்போன் வீடியோவில் பேசி வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் 7 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர டெலிபோன் பூத் மூலம் மாதம் 5 முறை உறவினர்களுடன்  தலா 10 நிமிடம் பேசலாம். நன்னடத்தை கைதிகள் மாதம் ஒருமுறை குடும்பத்தினருடன் அமர்ந்து பேசி வருகிறார்கள்.  மத்திய சிறைகளில் மட்டும் தினமும் 2 ஆயிரம் கைதிகள் உறவினர்களுடன்  பேசி மகிழ்ந்து வருகின்றனர். இதனை மாவட்ட  மற்றும் கிளைச்சிறைகளுக்கும் விரிவுபடுத்தினால் கைதிகள் பயன் அடைவார்கள். அவர்களின் மனஅழுத்தமும் வெகுவாக குறைந்து விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, மத்திய சிறைகளில் உள்ள வீடியோ கால் பேசும் வசதி,  மாவட்டம் மற்றும் கிளை சிறைகளுக்கும் அவசியம் வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேசும் அனைத்தும் பதிவு
வீடியோ கால் பேசும்போது கைதியுடன் 2 வார்டன்கள் இருப்பார்கள். அவர் என்ன பேசுகிறார் என்பதை கவனித்துக்கொண்டிருப்பார்கள். எதிர்தரப்பினரை பழிக்கு பழிவாங்க வேண்டும் என்பது போன்று பேசினால், அவருக்கு உறவினர்களுடன் பேசுவதற்கு தடை விதிக்கப்படும். அதே நேரத்தில் அவர் பேசும் அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது.

40ஆண்டுகளுக்கு முன்பு கட்டுப்பாடுகள் இல்லை
‘‘தமிழகத்தில் 9 மத்திய சிறை, 8 மாவட்ட சிறை, 5 பெண்கள் மத்திய சிறை, பாஸ்டல் பள்ளி, திறந்த வெளிச்சிறை என  மொத்தம் 138 சிறைகள் உள்ளன. இச்சிறைகளில் சுமார் 14ஆயிரம் கைதிகள் இருக்கிறார்கள். சிறையில் கைதிகளும், உறவினர்களும் சந்தித்து பேசுவதற்கு ஆரம்பத்தில் இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. இருதரப்பினருக்கும் இடையில் ஒரு சுவர் மட்டும் இருக்கும். அருகருகே நின்று பேசிக்கொள்ளலாம். ஆனால், அப்போது சிலர், பாசமழை பொழிந்து கையை பிடித்து எல்லை மீறியதால், கடந்த 40 ஆண்டுகளாக இந்த இடைவெளி அதிகரிக்கப்பட்டு கம்பி வலை போடப்பட்டுள்ளது,’’ என்கின்றனர் மூத்த அதிகாரிகள்.

முறைகேடுகளுக்கு முடிவு கட்டிய திட்டம்  
வீடியோ கால் பேச்சு மூலம், சிறையில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு உறவினர்கள் பழம், பிஸ்கெட் கொண்டு வருவார்கள். ஆனால் அது முழுமையாக கைதிகளின் கைகளுக்கு செல்லாது. இடையில் இருக்கும் வார்டன்கள் அபேஸ் செய்து கொள்வார்கள். அந்த கெட்டப்பெயர் இதன் மூலம் நிறுத்தப்பட்டுள்ளது.  மேலும் கைதியை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் செலவும் மிச்சமாகிறது. கைதிகளின் நண்பர்களும் சிறைக்கு பார்க்க வருவார்கள். அப்போது கஞ்சா பொட்டலம் வீசி செல்வார்கள். அதுவும் தற்போது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புகைப்படத்துடன் ரசீது  
சிறை கைதியை ஒரே நேரத்தில் 3 பேர் பார்க்கலாம். இதற்காக அவர்களின் ஆதார் அட்டை கொண்டு வரவேண்டும். இதற்கான விண்ணப்பத்தில் அந்த நம்பரை குறிப்பதுடன், அவர்களின் புகைப்படம் எடுக்கப்படும். வாக்காளர் அடையாள அட்டை போல புகைப்படத்துடன் ரசீது கொடுக்கப்படும். அதனை கொண்டு சென்று கைதியிடம் தெரிவிக்கப்படும். அவர் பார்க்க விருப்பப்படும் பட்சத்தில் உறவினர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.Tags : speech ,prison inmates ,jails ,Central Prisoners of Depression , Depression ,Central ,Prisoners
× RELATED ரஜினிகாந்த் முதலில் கட்சியை பதிவு...