×

தென்னையை தாக்கும் ‘கொரோனா’: விவசாயிகள் அதிர்ச்சி

நாகர்கோவில்:  குமரி மாவட்டத்தில் முக்கிய விவசாயமாக ரப்பர், நெல், வாழை, தென்னை விளங்கி வருகிறது. இதுபோல் மிளகு, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் உள்பட பல்வேறு பணப்பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ரப்பர், தென்னை, வாழை ஆகியவை அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் தேங்காய், வாழைகுலைகள் பிறமாவட்டம், மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ரப்பருக்கு போதிய அளவு விலை இல்லாதகாரணத்தால், ரப்பர் பயிரிடப்பட்ட பகுதிகளில் தென்னை, வாழை   சாகுபடி செய்து வருகின்றனர்.குமரி மாவட்டத்தில் சுமார் 24 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.  ெதன்னை மரங்களில் இருந்து உற்பத்தியாகும் தேங்காய், மற்றும் தேங்காய் மட்டை, இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அன்னிய செலவாணி கிடைத்து வருகிறது. தென்னை மரங்களை பூச்சிகள் தொடர்ந்து தாக்கி வருவதால் அவற்றை காப்பாற்றுவதற்கு விவசாயிகள் போராடி வருகின்றனர்.

தென்னையை தாக்கும் பூச்சிகளை அதற்கு உண்டான தடுப்பு மருந்துகளை தெளித்து கட்டுப்படுத்தலாம்.  ஆனால் நோயால் தாக்கப்படும் தென்னை மரங்களை காப்பாற்றுவது எளிதானது அல்ல.  குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு காலநிலைக்கு ஏற்ப தென்னையில் வெவ்வேறு பூச்சிகளின் தாக்குதல் இருந்து வருகிறது. கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டார் தாலுகா பகுதிகளில்  தென்னை மரங்கள் கேரள வாடல் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறது. கேரள வாடல் நோய் தாக்கும்போது தென்னையில் இருந்து வெளியே வரும் ஓலைகள் சிறியதாக காணப்படும். மேலும் மகசூல் குறைந்து தென்னையின் வளர்ச்சியும் குறைந்துவிடும்.  கேரள வாடல்நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் தென்னைமரங்களில் மகசூல் இருக்காது.  தென்னைகளை அப்படியே விட்டாலும் எந்த பலனும் தராது. அப்படியே விடும் பட்சத்தில் அடுத்த தென்னைகளுக்கு இந்த கேரள வாடல் நோய் பரவும். குமரி மாவட்டத்தில் கேரள வாடல்நோய் பரவதொடங்கியுள்ளதால் நன்றாக நிற்கும் மரத்தில் எந்த வித அறிகுறியும் தெரியாமல், தென்னைமரத்தின் குருத்துகள் முறிந்து தொங்கிக்கொண்டு இருக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஓகிபுயலை தொடர்ந்து பல வகைகளில் குமரி மாவட்ட தென்னை விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இது குறித்து விவசாயி செண்பகசேகரபிள்ளை கூறியதாவது: குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு சீதோஷணநிலைக்கு ஏற்ப தென்னைகளை நோய், பூச்சிகள் தாக்கி வருகிறது. இதனால் மகசூல்  குறைகிறது.  கேரளவாடல், தஞ்சை வாடல் உள்ளிட்ட நோயால் தாக்கப்படும் தென்னைகளை காப்பாற்றுவது முடியாதது. கேரள வாடல் நோயால் தாக்குதலுக்கு உள்ளாகும் தென்னை ஓலைகள் சிறுத்து, தென்னை மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதுபோல் தஞ்சை வாடல் நோயால் பாதிக்கப்படும் தென்னை மரத்தின் ஓலைகள் அனைத்தும் வாடிகீழே சரிந்துவிடும். மேலும் தென்னை மரங்கள் பட்டுபோகும். இந்த நோய்களுக்கு சரியான தடுப்பு மருந்துகள் இல்லை.  இந்த தென்னை வாடல் நோய்க்கான மருந்தை விரைவில் கண்டுபிடித்தால், குமரி மாவட்டத்தில் கேரள வாடல் நோயில் இருந்து தென்னையை காப்பாற்றலாம் என்றார்.கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்கவில்லை. அதுபோன்று தென்னையை தாக்கும் கேரள வாடல் நோய்க்கும் மருந்து இல்லை.   

வேளாண்மைதுறை துணைஇயக்குநர் முருகேசன் கூறியது: தென்னையை தாக்கும் முக்கிய நோய்களில் கேரள வாடல் நோய் ஒன்று. குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பகுதியை தவிர மற்ற பகுதிகளில் கேரள வாடல் நோயால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நோய்க்கு சரியான மருந்து இல்லை. கேரள வாடல் நோய் தாக்கப்படும் தென்னையை ஆரம்ப நிலையிலேயே வெட்டி அகற்றிவிடவேண்டும். இல்லாவிட்டால் வேறு தென்னைக்கும் இந்த கேரள வாடல் நோய் வேகமாகபரவும். கேரள வாடல் நோய் தாக்கப்படும் மரத்தை வெட்ட தென்னை வளர்ச்சி வாரியம் 1050 வழங்குகிறது என்றார்.

வண்டுகளால் பாதிப்பு
வேளாண்மை ஆராய்ச்சிதுறை அதிகாரி கவிதா கூறியதாவது: குமரி மாவட்டத்தில் தென்னையில் பூச்சிகள், நோய்களால் பாதிப்புகள் மாறி மாறி வந்துகொண்ட இருக்கிறது. குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கேரள வாடல் நோய் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது கேரளவாடல் நோய் தாக்கம் இருப்பதுபோல் இல்லை. தென்னை மரத்தின் குருத்தோலைகள் முறிந்துவிழுவதை பார்க்கும்போது, கண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டுகள் தாக்கம் இருக்கலாம். வண்டுகள் தாக்குவதன் மூலம்தான் தென்னை குருத்தோலைகள் முறியும் என்றார்.

தென்னையை தாக்கும் வண்டுகள்
காண்டமிருக வண்டு, சிவப்பு  கூன்வண்டு, செம்பான் சிலந்தி, கருந்தலைபுழு, வெள்ளை சுருள் ஈ போன்ற  பூச்சிகளாலும் தென்னை தாக்கப்பட்டு வருகிறது.

1000 நிதி உதவி
மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் கேரள வாடல்நோய் தாக்கப்பட்ட தென்னைகளை அகற்ற விவசாயிகளுக்கு ₹1000ம் மற்றும் புதிய தென்னங்கன்று வாங்கி நட ₹50 வழங்கி வருகிறது.

தடுப்பு மருந்து
தென்னை குருத்துபகுதிகளில் பூச்சிகள் இருக்கும் இதனால் ‘ரெட் பல்ம் வீவில் லிமிடா சோலபிரிட்’ என்ற மருந்தை இரண்டு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி மருந்தை கலந்து பாதிக்கப்பட்ட தென்னையின் குருத்து பகுதியில் விடவேண்டும். இப்படி மருந்து விடும்போது  தென்னையில் இருக்கும் பூச்சிகள் அழியும்

ஈர்க்கைவிட தேங்காய் விலை குறைவு
குமரி மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருகிறது. இதனால் போதிய அளவு தென்னை விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பது இல்லை. இதற்கு மாற்று வழியாக தென்னை தோட்டத்தில் கிடைக்கும் தென்னை ஓலைகளில் இருந்து விவசாயிகள், வீட்டில் இருக்கும் பெண்கள் ஈர்க்கு எடுத்து வருகின்றனர். 4 ஓலைகளில் ஒரு கிலோ ஈர்க்கு கிடைக்கிறது. தற்போது ஒரு கிலோ ஈர்க்கு ₹20க்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்குகின்றனர். ஆனால் ஈர்க்கை விட தேங்காய் விலை குறைந்தே விற்பனையாகிறது. ஒரு தேங்காய் தரத்திற்கு ஏற்றார்போல் ₹12 முதல் ₹15 வரையே விலைகொடுத்து வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து வாங்கிச்செல்கின்றனர்.

Tags : Corona ,South: Farmers , Coronation , south, farmers, shock
× RELATED கொரோனாவுக்கு மகன் பலியான அதிர்ச்சியில் தாயும் சாவு