×

பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியில் விதிகளை மீறி கட்டுமானமா?

கூடலூர்: பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியில் விதிகளை மீறி கட்டுமானம் அமைத்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து, பசுமை தீர்ப்பாயம் நியமித்த ஐவர் குழு நேற்று ஆய்வு செய்தது.பெரியாறு வனவிலங்கு சரணாலயப்பகுதியான ஆனவச்சால் பகுதியில், கார் பார்க்கிங் கட்டுமானம் சம்பந்தமாக கடந்த 2014ல் குமுளியைச் சேர்ந்த தங்கப்பன் மற்றும் ஆபிரகாம் தாமஸ் ஆகியோர் கொடுத்த புகாருக்கு 2017ல் பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெற்ற பின்பே, கட்டுமான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தது. ஆனால் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறாமல், பசுமை தீர்ப்பாயம் வழங்கிய வழிமுறைகளை மீறி பார்க்கிங் கட்டுமானப்பணியை கேரள அரசு செய்துள்ளது. மேலும் வனச்சட்டம், தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் வழிமுறைகளை மீறி வஞ்சிவயல் பகுதியில் விளையாட்டு மைதானமும் அமைத்துள்ளதாக குமுளியைச் சேர்ந்த சஜிமோன் சலீம் என்பவர் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்து அறிக்கை வழங்க இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேசன் தலைமையில், முதன்மை தலைமை வன பாதுகாவலர் முரளி, முதன்மை வனவிலங்கு பாதுகாவலர் சுரேந்திரகுமார், தேசிய புலிகள் காப்பக ஆணைய பிரதிநிதி அனூப் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய பிரதிநிதி என 5 பேர் கொண்ட குழுவை பசுமை தீர்ப்பாயம் நியமித்தது.இதையடுத்து இக்குழுவினர் புலிகள் சரணாலயப்பகுதியான வஞ்சிவயல் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானம் மற்றும் தேக்கடி ஆனவச்சால் கார் பார்க்கிங் பகுதிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்த விரிவான அறிக்கையை விரைவில் பசுமை தீர்ப்பாயத்தில் ஒப்படைக்க உள்ளதாக குழுவினர் தெரிவித்தனர்.

தமிழக அரசு தொடர்ந்து மவுனம்
தேக்கடி வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்த குமுளி அருகே உள்ள ஆனவச்சால் பகுதியில், சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் கார் பார்க்கிங் அமைப்பதற்கான இடத்தை கேரள வனத்துறை தேர்வு செய்தது. ஆனால் இந்த இடம் பெரியாறு அணை நீர்தேக்கப்பரப்பு பகுதி என்பதால் கார் பார்க்கிங் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமுளியைச் சேர்ந்த தாமஸ் ஆபிரகாம் 2014, ஜூன் மாதம் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழக அரசும் இணைந்து கொண்டது. இதனால் ஆனவச்சாலில் பணிகள் செய்வதற்கு கடந்த 2015, செப். 5ல் பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கில் தமிழக அரசு தொடர்ந்து மவுனம் சாதித்ததாலும், வழக்கு விசாரணையின்போது தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகாததாலும் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தின் கோரிக்கையை ஏற்று, ஆனவச்சால் பகுதியில் கட்டிடங்கள் இல்லாத வாகன நிறுத்தும் இடம் மட்டும் அமைத்துக் கொள்ள 2017ல் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் விதிமுறைகளுடன் கூடிய தற்காலிக உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Periyar ,sanctuary , tiger ,break ,rules, sanctuary?
× RELATED பளியன்குடி வனப்பகுதி வழியாக கண்ணகி...