×

அமீரகத்தில் இந்திய தூதரகம் மற்றும் துணைத்தூதரக பாஸ்போர்ட் சேவை மையங்களில் புதிய சேவை அறிமுகம்

அபுதாபி: அமீரகத்தில் இந்திய தூதரகம் மற்றும் துணைத்தூதரகம் சார்பில் செயல்படும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தூதரகம் மற்றும் துணைத்தூதரகம் சார்பில் செயல்படும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் (பிஎல்ஸ் இண்டர்நேசனல் சென்டர்ஸ்) புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மற்றும் அதிக அளவில் கூட்டம் சேருவதை கட்டுப்படுத்த இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக பாஸ்போர்ட் புதிதாக வாங்க அல்லது புதுப்பிக்க சம்பந்தப்பட்டவர் நேரில் பாஸ்போர்ட் சேவை மையங்களை அணுக வேண்டும்.

தற்போது இதில் விலக்கு அளிக்கும் வகையில் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் சிறுமியர், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் நேரில் வர தேவையில்லை. அவர்களுக்கு பதிலாக குடும்ப உறுப்பினர்கள் யாராவது வந்து தேவையான ஆவணங்களுடன் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம். இதில் பாஸ்போர்ட் வைத்திருப்பவரிடம் ஒரு ஒப்புதல் கடிதத்தை பெற்று வர வேண்டும். கர்ப்பிணி பெண்கள் தங்கள் கணவரை அனுப்பலாம். கணவர்கள் மனைவி கர்ப்பமாக உள்ளார் என்பதற்கான மருத்துவ சான்றிதழை எடுத்து வர வேண்டும்.

அதேபோல 12 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அவர்களது தந்தை அல்லது தாய் ஆகிய இருவரில் ஒருவர் தேவையான ஆவணங்களுடன் வந்தால் போதுமானது. மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவரது தந்தை, தாய் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் தகுந்த மருத்துவ சான்றிதழ் மற்றும் ஆவணங்களுடன் பாஸ்போர்ட் சேவை மையத்தை அணுகலாம்.

பாஸ்போர்ட் சேவையை பொருத்தவரையில் அமீரகத்தில் உள்ள 10 இந்திய பாஸ்போர்ட் சேவை மையங்களில் முன் பதிவு செய்ய https://blsindiavisa-uae.com/passport/bookapp.php என்ற இணையதள முகவரியை பயன்படுத்த வேண்டும். இதில் அப்பாயின்மென்ட் உள்ள நேரம், தேவையான சேவை உள்ளிட்ட தகவல்கள் அளிக்கப்படும். விண்ணப்பதாரர் பெயர், வசிக்கும் பகுதி, இ மெயில் முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தால் பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு செல்வதற்கான அனுமதி தரப்படும். இந்த சேவையை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Indian Embassy ,Consular Passport Service Centers , Embassy, Indian Embassy, Consulate General, Passport Service Center, New Service, Introduction
× RELATED இஸ்ரேல் எல்லையில் உள்ள இந்தியர்கள்...