×

20 ராணுவ வீரர்கள் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்க வேண்டும்: தேவேகவுடா வலியுறுத்தல்

பெங்களூரு: லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 20 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தது குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா வலியுறுத்தியுள்ளார். இந்திய-சீன எல்லை பிரச்சினை குறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தேவேகவுடா கூறுகையில், இந்திய-சீன எல்லை பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தை கூட்டிய பிரதமரை நான் பாராட்டுகிறேன்.

தேசிய நலனை கருத்தில் கொண்டு நான் சில ஆலோசனைகளை முன்வைக்க விரும்புகிறேன். இந்திய-சீன எல்லை பிரச்சினை மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மூத்த ராணுவ அதிகாரி மற்றும் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி ஆகியோர், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விரிவான முறையில் தகவல்களை வழங்க வேண்டும். இந்த தகவல்கள் இருந்தால் தான் அரசு மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் இடையே ஒரு நல்ல அர்த்தப்பூர்வமான கருத்துகளை பரிமாறிக்கொள்ள முடியும். தற்போது வரை இந்த விவகாரத்தில் ஊடகங்கள் மூலமான தகவல்கள் மட்டுமே எங்களிடம் உள்ளது. இது எல்லா நேரங்களிலும் நம்பகத்தன்மையுடன் இருக்காது. எனவே நம்பகமான தகவல்கள் எங்களுக்கு தேவைப்படுகிறது.

பழி வாங்குதல், ஆத்திரமூட்டும் வகையில் பேச இது சரியான நேரம் ஆகாது. இதனால் ஊடகங்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. அதன்படி நடந்தால் நமது ராணுவ வீரர்களின் உயிர் மற்றும் தூதரக ஊழியர்களின் வாழ்க்கை சிக்கலாக அமைந்துவிடும். இதனால் இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என் தேவேகவுடா கூறினார். அதற்கு கருத்துகளை கூறுவது, அதுபற்றி விவாதிப்பது, செய்திகளை வெளியிடுவது போன்றவற்றை நிறுத்த வேண்டும் என்று அர்த்தம் என்று எண்ண வேண்டாம். எதிர்க்கட்சி தலைவர்களும், இந்த விவகாரத்தில் மோசமான வார்த்தைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

நமது உள்ளூர் அரசியலையும், தேசிய பாதுகாப்பையும் ஒன்றாக பார்க்க முடியாது. இதை நான் சொல்வதன் மூலம் அரசை கேள்வி எழுப்பக்கூடாது என்று அர்த்தம் அல்ல. நமது நாட்டின் பெரிய பிரச்சினையை மனதில் வைத்து பேச வேண்டும். இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு சரியான முறையில் தெரியப்படுத்த வேண்டும். சில தகவல்களை மூடிமறைப்பது சில விஷயங்களில் தகவல்களை மிகைப்படுத்தி கூறுவது நமது நாட்டின் நீண்ட கால நலனுக்கு மோசமான செயல் திட்டமாக அமைந்துவிடும். சமீபகாலமாக ராணுவத்தை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்த முயற்சி நடக்கிறது.

இது மிக ஆபத்தானது செயல், ராணுவத்தை, ராணுவ வழியில் செயல்பட விட வேண்டும். அவ்வாறு செய்தால் அரசுக்கு அவர்கள் பயமின்றியும் சரியான முறையிலும் அறிவுரை வழங்குவார்கள். லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 20 ராணுவ வீரர்கள் இறந்த விவகாரம் குறித்து விசாரணை குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இதன் மூலம் இந்த சம்பவத்திற்கு சரியான காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ள முடியும். மேலும் சீனாவை பொருளாதார ரீதியாக புறக்கணிக்க வேண்டும் என்ற வாதத்தை அரசு ஊக்கப்படுத்தக்கூடாது. இதனால் ஆழமான சிக்கல்கள் ஏற்படும் என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

Tags : Army ,Deve Gowda ,personnel ,deaths , 20 Soldiers, Death, Inquiry, Formation of Inquiry Team, Deve Gowda, Insist
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...