×

தாய்லாந்து,தைவான், இலங்கை.... கொரோனாவுக்கு இரும்புக் கோட்டையாக மாறிய 7 ஆசிய நாடுகள்!!!

தாய்லாந்து :  உலக அரசுகள் அனைத்தும் தற்போது தடுமாறி வருவது கொரோனா வைரஸிற்கு மட்டும் தான் என சொன்னால் அது மிகையாகாது. விஞ்ஞானிகளும், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒருபுறம் மருந்து கண்டுப்பிடிப்பதில் தீவிரம் காட்டிவரும் இந்த சூழலில், நாம் நம்மை கொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்ள உதவும் ஆயுதம் முகக்கவசங்கள் மட்டுமே. இந்நிலையில் தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் நாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் முன்னுதாரணமாக விளங்குகிறது.

தாய்லாந்து


தாய்லாந்தில் இதுவரை 3,135 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் 3,0996 பேர் குணமடைந்துள்ளனர். 58 பேர் உயிரிழந்துள்ளனர்.தாய்லாந்தில் 23 நாட்களுக்கு மேலாக கொரோனா தொற்றும் உயிரிழப்பும் பதிவாகாத நிலை உள்ளது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவேளி பின்பற்றுதல் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் தாய்லாந்தில் பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் வணிக நடவடிக்கைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

பூட்டான்


பூட்டானில் முதல் கொரோனா தொற்று நோயாளி கண்டுபிடிக்கப்பட்டபோதே, அவருடன் தொடர்பில் இருந்த  அனைவரையும் சில மணிநேரங்களிலேயே கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டனர். ஜூன் 17 வரை, பூட்டானில் கொரோனா தொற்று நோய் காரணமாக ஒரு மரணம் கூட ஏற்படவில்லை, மேலும் 59 நோய்த்தொற்றுகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

வியட்நாம்

வியட்நாமில் 335 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் ஒருவர் கூட இல்லை. 325 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில்,10 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1.25 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்த வியட்நாமில்,  சுகாதார சேவைகள் ஐரோப்பா அல்லது அமெரிக்காவை போன்று வலுவானது அல்ல. இந்த நடுத்தர வருமானம் கொண்ட நாட்டில், 10,000 பேருக்கு 8 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். கொரோனா பாதிப்பு இல்லாத போதே, வியட்நாம் அரசு பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், இத்தகைய சாதனையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தைவான்

தைவானில், 453 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். சீனாவிற்கு மிக அருகில் அமைந்திருக்கும் தைவானில் 2.4 கோடி மக்கள் வசிக்கின்றனர். தைவான் நாடு சார்ஸ் வைரஸ் போராட்டத்தில் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடத்தைதான் கோவிட்டிற்கு எதிரான போரில் உபயோகித்து, பாதிப்பு அதிகரிக்காமல் காத்திருக்கிறது. தைவானின் ஜனாதிபதியான சாய் இங்-வென், ஜனவரி மாதத்திலேயே எல்லையில் கடுமையான விதிமுறைகளை அறிவித்து, சர்வதேச தொடர்புகளைக் குறைக்க ஆரம்பித்தார். மக்களும் நோய்த்தொற்று ஆரம்பிக்கும் முன்பே தெருக்களில் முகக்கவசம் அணிந்து சுகாதாரத்தை கடைப்பிடிக்கத் தொடங்கினர். வூஹானில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த போதே தைவானில் இதற்கான திட்டங்களும், கலந்துரையாடல்களும் அரசாங்கம் மேற்கொண்டது. நாடு முழுவதும் கொரோனா சோதனையும், இதற்கு முன் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு சோதனை செய்யப்பட்டது.

கம்போடியா


அனைத்து COVID-19 நோயாளிகளும் குணமடைந்துள்ளதாகவும், ஒரு மாதமாக கொரோனா நோய் பாதிப்பு எவருக்கும் உருவாகவில்லை என்றும் கம்போடியா அரசு தெரிவித்துள்ளது. இன்றுவரை, நாட்டில் 128  பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் கூட மரணிக்கவில்லை.

இலங்கை

ஏறக்குறைய இரண்டு மாதங்கள் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிற்கு பின், தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் இலங்கையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. COVID-19 ஐ கட்டுப்படுத்த முடிந்தது என்று இலங்கை அரசு  கூறியுள்ளது. சுமார் 2.15 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 1,921 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், 11 பேர் இறந்தனர்.

ஜார்ஜியா


ஐரோப்பாவும் ஆசியாவும் சந்திக்கும் இடத்தில் ஜார்ஜியா நாடு அமைந்துள்ளது. இங்கு  கொரோனா பரவலின் ஆரம்ப காலத்திலேயே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதன் விளைவாக, புதிய கொரோனா பாதிப்புகள் எதுவும் சமீபத்தில் பதிவாகவில்லை.

Tags : Sri Lanka ,Taiwan ,Thailand ,Asian ,Countries ,Corona , Thailand, Taiwan, Sri Lanka, Corona, Iron Fort, Asian countries
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்