×

கட்சித் தாவல், குதிரை பேரம் என அமர்க்களப்பட்ட மாநிலங்களவை தேர்தல் அமைதியாக முடிந்தது

புதுடெல்லி : கட்சித் தாவல், குதிரை பேரம் என அமர்க்களப்பட்ட 19 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. நாடு முழுவதும் 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடக்க இருந்தது.


இதில் தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் 37 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர். மீதமுள்ள 18 இடங்களுக்கு நடக்க இருந்த தேர்தல், கொரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே, கர்நாடகா, மிசோரம், அருணாச்சல பிரதேசத்திற்கும் சேர்த்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் கர்நாடகா, அருணாச்சலில் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர். இந்நிலையில், மிசோரமில் ஒரு இடத்திற்கும் சேர்த்து, ஆந்திரா மற்றும் குஜராத்தில் இருந்து தலா 4 இடங்களும், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து தலா 3 இடங்களும், ஜார்க்கண்டிலிருந்து இரண்டு இடங்களும், மேகாலயா, மணிப்பூரிலிருந்து தலா ஒரு இடமும் என மொத்தம் 19 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது.  வாக்குப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடந்தது. அந்தந்த மாநில சட்டப்பேரவைகளில் மாநில எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.


மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டன. இதன் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டன. இதில், மத்திய பிரதேசத்தில் காங்கிரசில் இருந்து பாஜ.வுக்கு 22 எம்எல்ஏக்களுடன் கட்சி தாவிய ஜோதிராதித்யா சிந்தியா பாஜ சார்பில் போட்டியிட்டு வென்றார். காங்கிரஸ் தரப்பில் திக்விஜய் சிங் வெற்றி பெற்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத்தில், 2 பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் ஓட்டு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்ததால் கடும் குழப்பம் ஏற்பட்டது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அங்கு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

கவச உடையுடன் வந்த கொரோனா எம்எல்ஏ


மத்திய பிரதேசத்தில் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர், கவச உடை அணிந்தபடி வாக்களிக்க நேரில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடல், தலை முழுவதும் மூடிய மருத்துவ கவச உடை அணிந்திருந்தபடி ஓட்டளித்த பின், சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு அவர் திரும்பிச் சென்றார். உடனடியாக போபால் சட்டப்பேரவை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அதன்பிறகே மற்ற எம்எல்ஏக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இவர் கொரோனா விதிமுறையை மீறியதாக போலீசில் பாஜ புகார் அளித்துள்ளது.

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங். 4/4

* ஆந்திராவில் 4 இடங்களிலும் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
* ஜார்க்கண்டில் 2 இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சிபுசோரனும், பாஜ.வின் தீபக் பிரகாஷும் வெற்றி பெற்றனர்.
* மத்திய பிரதேசத்தில் பாஜ 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வென்றன.
* மணிப்பூரில் ஒரு இடத்தை பாஜ பிடித்தது.
* மேகாலயாவில் தேர்தல் நடந்த ஒரு இடத்தை என்பிபி கட்சி வென்றது.
* ராஜஸ்தானில் காங்கிரஸ் 2 இடங்களையும், பாஜ ஒரு இடத்தையும் பிடித்தன.
* மிசோரமில் எம்என்எப் கட்சி ஒரு இடத்தை பிடித்தது

Tags : Elections ,states ,Corona MLA ,bargaining ,Rajyasabha , Rajyasabha elections,Rajyasabha,19 seats
× RELATED மக்களவை தேர்தலில் அரியானா, ராஜஸ்தான்...