×

அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா எதிரொலி தமிழக அமைச்சர்கள் பீதி: துணை முதல்வர் திடீர் பரிசோதனை

சென்னை : உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளதால், அவருடன் நெருக்கமாக இருந்த அமைச்சர்கள் பீதி அடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதேபோன்று முதல்வர் சென்னையில் கொரோனா வைரஸ் நோய் அதிகம் பரவுவதை தடுக்க அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 6 பேரை முதல்வர் நியமித்தார். இந்த அமைச்சர்கள் தினசரி நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று களஆய்வு செய்தனர். இந்நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் கார் டிரைவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும் காய்ச்சல், சளி இருந்தது. இவர் 3 நாட்களுக்கு முன் சென்னை போரூர் அருகே மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று உறுதியானது. இதைதொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அமைச்சர் பென்ஜமின் கார் டிரைவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அமைச்சர் கே.பி.அன்பழனுடன் நெருக்கமாக இருந்த அமைச்சர்கள் தற்போது பீதியில் உள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னையில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், அன்பழகன், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாண்டியராஜன் உள்ளிட்ட 6 அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். தற்போது கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அவருடன் நெருங்கி பழகி வந்த 6 அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், பணியாளர்கள் அச்சத்தில் உள்ளனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின் உள்ளிட்ட சில அமைச்சர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதுடன், கொரோனா பரிசோதனையும் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 அதேபோன்று, அமைச்சர் அன்பழகனுடன் பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் இணைந்து பணியாற்றிய முன்னாள் அதிமுக எம்பி ஜெயவர்தன், முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன் உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகளும் கலக்கத்தில் உள்ளனர். முதல்வரின் அலுவலக பிரிவில் பணியாற்றும் 4 பேர் புதிதாக கொரோனா பாதிப்பால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் 45 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தலைமை செயலக ஊழியர்கள் 150க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது, மற்ற ஊழியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அந்த பரிசோதனை முடிவு நேற்று மாலையே வந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

Tags : minister ,All ministers ,Anaphagan ,Deputy ,TN , TN minister, Corona, Anbalagan,TN Deputy CM OPS,PCR test
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...