×

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் எப்போது தமிழகம் வருவார்கள்?: மத்திய அரசு விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

*வந்தே பாரத் திட்டத்தின்கீழ் எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் இயக்கலாம் என்றும் அதற்கு எந்த ஆட்சேபமும் இல்லை

சென்னை : கொரோனா ஊரடங்கு காரணமாக விமான  சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர விமானங்களை இயக்க மத்திய அரசு உத்தரவிட்டது.  ஆனால், தமிழகத்தில் விமானப் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.  இதை எதிர்த்தும் விமானங்களை தமிழகத்தில் தரையிறக்க அனுமதிக்க கோரியும் திமுக சார்பில் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களின் விவரங்கள், இதுவரை இந்தியாவிலும், தமிழகத்திலும் இயக்கப்பட்ட விமானங்கள் எத்தனை, சிக்கியுள்ள மீதமுள்ளவர்களை மீட்க இந்திய அரசின் திட்டம் என்ன, பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு வழங்கியுள்ள நிவாரண உதவிகள் என்னென்ன என்பன குறித்த விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.   

 இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் 40 ஆயிரத்து 433 தமிழர்கள் ஊர் திரும்ப விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 14 ஆயிரத்து 65 தமிழர்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளனர்.  26 ஆயிரத்து 368 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என்று கூறப்பட்டிருந்தது.   திமுக சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழர்களை மீட்டு வர எத்தனை விமானங்கள் இயக்கப்படுகின்றன என்பது குறித்தும், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட  நிதி உதவி உணவு மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து மத்திய அரசு தனது அறிக்கையில் எதையும் குறிப்பிடவில்லை என்று வாதிட்டார்.

 தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அவகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், வந்தே பாரத் திட்டத்தின்கீழ் எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் இயக்கலாம் என்றும் அதற்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றும் தெரிவித்தார்.  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றம் ஜூன் 12ம் தேதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு முழுவதுமாக அமல்படுத்த வேண்டும்.  சொந்த ஊர் திரும்ப விண்ணப்பித்துள்ள தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள் என்பது குறித்தும், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கூடுதல் விமானங்கள் இயக்குவது குறித்த திட்டங்கள் பற்றியும் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Tamils ,Tamil Nadu ,return ,government ,countries , Tamilian , corona lockdown,highcourt ,central government, vande bharath mission
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!