×

சென்னையை ஒட்டிய டாஸ்மாக் கடைகளில் ரூ.65 கோடிக்கு மது விற்பனை: முழு ஊரடங்கு உத்தரவால் குடிமகன்கள் அள்ளிச்சென்றனர்

சென்னை : முழு ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக கடந்த இரண்டு நாட்களில் சென்னையை ஒட்டிய டாஸ்மாக் கடைகளில் ₹65 கோடிக்கு மதுவிற்பனையாகியுள்ளது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க அரசு அறிவுறுத்தியதால் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே, சென்னை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. சென்னை நீங்கலாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் 77 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது.

ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு இந்த கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டதால் கடந்த இரண்டு நாட்களாக கடைகளில் கூட்டம் அலைமோதியது. மேலும், மது வாங்குவதில் இருந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால் குடிமகன்கள் பெட்டி, பெட்டியாக மதுவகைகளை வாங்கிச்சென்றனர். உயர்தர மதுவகைகள் முதல் நடுத்தர மதுவகைகள் வரை எது கிடைத்தாலும் அதை வாங்கினர். இதனால், கடந்த இரண்டு நாட்களில் வழக்கத்தை விட கூடுதலாக மதுவிற்பனை நடந்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த மாதம் 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட போது இருந்த கூட்டம் போல் இரண்டு நாட்களாக கூட்டம் காணப்பட்டது. சென்னையில் இருந்தும் ஏராளமானோர் கார் மற்றும் பைக்குகளில் வந்து மதுவாங்கிச்சென்றனர். இதனால், கடந்த இரண்டு நாட்களில் வழக்கத்தை விட விற்பனை அதிகரித்தது. அதன்படி, கடந்த 17ம் தேதி திருவள்ளூரில் ₹13 கோடியும், காஞ்சிபுரம் வடக்கு ₹5 கோடி, காஞ்சிபுரம் தெற்கில் ₹16 கோடியும்,  18ம் தேதி திருவள்ளூரில் ₹12 கோடியும், காஞ்சிபுரம் வடக்கில் ₹5 கோடி, காஞ்சிபுரம் தெற்கு ₹16 கோடியும் என மொத்தமாக கடந்த இரண்டு நாட்களில் ₹65 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. வழக்கமான நாட்களை விட இருமடங்கு விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,sale ,regions ,Task Shop , tasmac,chennai , full lock down
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...