×

பிளம்பர் வீட்டை உடைத்து ₹8.6 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

ஆவடி : காற்றோட்டத்திற்காக வீட்டை பூட்டி விட்டு மொட்டை மாடியில் தூங்கியபோது பிளம்பர் வீட்டை உடைத்து ₹8.6 லட்சம் ரொக்கப்பணம், 7 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.


 ஆவடி அடுத்த வீராபுரம், தாமரை நகரை சேர்ந்தவர் நாகலிங்கம் (44). பிளம்பர். இவரது மனைவி அன்புச்செல்வி (38). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அன்புச் செல்லியின் தாயார் சந்திரா (55). இவர், கொரட்டூர், பாரதி நகரில் வசிக்கிறார். சந்திரா, அப்பகுதி மக்களிடம் தீபாவளி பண்ட் பிடித்துவருகிறார். அதற்குரிய பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக இவர், தனது மகள் அன்புச்செல்வியிடம் ₹8.6 லட்சம் வரை கொடுத்து வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சந்திரா,  மகள் அன்புசெல்வி வீட்டுக்கு வந்தார். பின்னர், இரவு காற்றோட்டத்திற்காக வீட்டை பூட்டி விட்டு நாகலிங்கம், தனது மனைவி, மகன்கள், மாமியார் சந்திரா ஆகியோருடன் வீட்டு மொட்டை மாடியில் தூங்கினார். நள்ளிரவு 2.30 மணி அளவில் நாகலிங்கம் மாடியில் இருந்து கீழே இறங்கி பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து, தனது மனைவி, மாமியாரை அழைத்து கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த ₹8.60 லட்சம் ரொக்கப்பணம், 7 சவரன் தங்க நகைகள் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. மேலும், அதே பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகையும், 14 ஆயிரம் ரொக்கப்பணமும் கொள்ளையர்களின் கண்களில் படாமல் தப்பியது தெரியவந்தது. இதுகுறித்து, தகவலறிந்த ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி,  ஆவடி டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டர் நடராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கைரேகை நிபுணர்கள் மூலம் கொள்ளையர்களின் கைரேகைகளை ஆய்வு செய்தனர். புகாரின் பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags : Plumber ,house ,persons , robbery, plumber house,aavadi,police
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்