×

தொழில் போட்டியில் லாரி டிரைவரை கடத்திய கிளீனர் உட்பட 4 பேர் கைது

பூந்தமல்லி : பூந்தமல்லி அருகே தொழில் போட்டியில் லாரி டிரைவரை கடத்திய கிளீனர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 4 பேரை தேடுகின்றனர். வேலூரை சேர்ந்தவர் கோட்டீஸ்வரன் (47).  இவர், பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் தங்கி சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு  பூந்தமல்லியிலிருந்து லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு ஆந்திராவுக்கு சென்று கொண்டிருந்தார். பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்றபோது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் லாரியை மடக்கினர். கோடீஸ்வரனை தாக்கி வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றி கடத்திச் சென்றனர். இதுகுறித்து லாரியில் இருந்த மற்றொரு டிரைவர் டில்லிபாபு, கிளீனர் அன்பு ஆகியோர் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த பூந்தமல்லி போலீஸ் உதவி கமிஷனர் செம்பேடு பாபு, இன்ஸ்பெக்டர் கிரி தலைமையில் சென்ற போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து டில்லிபாபு,  அன்புவிடம் நடத்திய தீவிர விசாரணையில், சென்னீர்குப்பத்தை சேர்ந்த இந்து (எ) தாஸ் (28), காடுவெட்டியை சேர்ந்த விமல் (29) உள்ளிட்ட கும்பல் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து கோட்டீஸ்வரனை மீட்டனர்.

விசாரணையில், கோட்டீஸ்வரனைப்போல் இந்துவும் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்துள்ளார். இருவருக்குமிடையே லாரிகளுக்கு லோடு பிடிப்பதில் ஏற்கனவே  முன் விரோதம் இருந்துள்ளது. எனவே  தொழில் போட்டி காரணமாக கோட்டீஸ்வரனை கடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும் சமீபத்தில்தான் டில்லிபாபுவை கோட்டீஸ்வரன் டிரைவராக வேலைக்கு சேர்த்துள்ளார். இந்த கடத்தல் சம்பவத்தில் டில்லிபாபு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்து, விமல் டில்லிபாபு மற்றும் அன்பு உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : truck driver ,cleaner ,kidnapping driver ,Poonthamalle , poonthamalle,lorry cleaner,kidnapping ,driver
× RELATED கொரோனாவால் உயிரிழந்த தூய்மைப்...