×

சென்னைப் புறநகரில் கடும் வாகன சோதனை அடையாள அட்டைகளை காட்டியும் அனுமதிக்க மறுத்த போலீசார்

திருப்போரூர் : சென்னைப் புறநகரில், போலீசார் கடும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அடையாள அட்டைகளை காட்டியும் அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பினர். சென்னையில் நேற்று முதல் முழுமையாகவும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சில குறிப்பிட்ட இடங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் சிறப்பு சோதனை சாவடிகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் வேலை செய்வதாக தனியார் நிறுவன ஊழியர்கள் வைத்திருந்த அடையாள அட்டைகளை காட்டியும், அவர்களை அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பினர். பழைய மாமல்லபுரம் சாலையில், திருப்போரூர் ரவுண்டானா, இள்ளலூர் சந்திப்பு, எஸ்எஸ்என் கல்லூரி, கேளம்பாக்கம் - கோவளம் சந்திப்பு, வண்டலூர் சந்திப்பு, சிறுசேரி சிப்காட் சந்திப்பு, நாவலூர் ஆகிய இடங்களிலும், கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் சந்திப்பு, முட்டுக்காடு படகுத்துறை, நெம்மேலி - திருப்போரூர் சந்திப்பு ஆகிய இடங்கள் உள்பட 11 இடங்களில் சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து, மது பாட்டில்களை வாங்குவதற்காக வந்த வாகனங்களை மடக்கி திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில் திருப்போரூர், ஆலத்தூர், வெங்கூர், கொட்டமேடு ஆகிய இடங்களில் திறக்கப்பட்டுள்ள 8 டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி திருப்போரூர் பஸ் நிலையம் அருகே மகளிர் அமைப்பினர் திரண்டு போராட்டம் நடத்த முயன்றனர்.
தகவலறிந்து மாமல்லபுரம் கூடுதல் எஸ்பி சுந்தரவதனம், திருப்போரூர் எஸ்ஐ ராஜா ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கேளம்பாக்கம், நாவலூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடியது போல், திருப்போரூர் பகுதியிலும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பெண்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு போலீசார், இதுகுறித்து கலெக்டர், எஸ்பி ஆகியோரிடம் பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை தொடர்ந்து பெண்கள் கலைந்துச் சென்றனர்.

Tags : suburb ,Chennai , Chennai, Corona, Full lockdown,vehicles ,Passes
× RELATED சென்னையில் போலீஸ் தாக்கியதால்...