×

கை கட்டி வேடிக்கை பார்க்கும் நகராட்சி நிர்வாகம் காஞ்சியில் கட்டுக்கு அடங்காத கொரோனா: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகராட்சியில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருந்த கொரோனா பாதிப்பு, நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. காஞ்சிபுரத்தில் 2 மற்றும் 3ம் கட்ட ஊரடங்கு காலங்களில் சாலைகளில் நடந்து செல்ல முடியாதபடி கடும் கட்டுப்பாடுகளை நகராட்சி நிர்வாகம் விதித்தது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளானாலும், கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் மாவட்டத்தின் பிற பகுதிகளில் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வரும் நிலையில் காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் கொரோனா அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் நகராட்சியில் கடந்த 1ம் தேதி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 என இருந்தது. பின்னர், 5ம் தேதி 11, 9, 10 தேதிகளில் 10 ஆக மாறியது. 16ம் தேதி 17, 17ம் தேதி 20, நேற்று 14 என எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனை தடுக்க நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர் என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கொரோனா தொற்றை தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான பணிகளை நகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ளாமல், பாதிப்பு காலத்திலும் வரி வசூலில் மட்டுமே அக்கறை காட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பெண் வியாபாரி பலி
திருப்போரூர் ஒன்றியம் கானத்தூர் ரெட்டிக்குப்பத்தை சேர்ந்த 47 வயது பெண், அப்பகுதியில் காய்கறி விற்பனை செய்து வந்தார். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கி வந்து, ரெட்டிக்குப்பத்தில் விற்பனை செய்து வந்தார். கோயம்பேடு மூடிய பிறகு திருமழிசை சென்று காய்கறிகளை வாங்கி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண் வியாபாரிக்கு, காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், அவர், கடந்த 10ம் தேதி கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதையடுத்து அதிகாரிகள் சார்பில், சடலத்தை செங்கல்பட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, அதன்பின்னர், உடல் தாம்பரம் அருகே எரியூட்டப்பட்டது.

Tags : administration , kanchipuram ,Corona cases, local bodies
× RELATED கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே...