×

தண்டையார்பேட்டை மண்டலத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீதியில் திரிவதால் பொதுமக்கள் அச்சம்: நோய் பாதிப்பில் 2வது இடத்தில் இருந்தும் விழிப்புணர்வு இல்லை

பெரம்பூர் : தண்டையார்பேட்டை மண்டலத்தில்  கொரோனா தொற்றால் பாதித்த நபர்கள் வீதியில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிப்பு அதிகம் உள்ள நபர்களை மருத்துவமனையில் அனுமதித்தும், குறைந்தளவு பாதிப்புள்ள நபர்களை வீட்டில் தனிமைப்படுத்தியும் கண்காணிக்கப்படுகின்றனர். நோய் தொற்று உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள்,  நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளனர். இவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள், கண்டிப்பாக 15 நாட்கள் வரை எக்காரணத்தை கொண்டும் வெளியே வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை மீறி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் வருவதை தடுக்கும் வகையில் நோய் தொற்று  பாதிப்பு உள்ள வீடுகளின் வெளியே தடுப்புகள் அமைக்கப்பட்டு, எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனையும் மீறி யாரேனும் வெளியில் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ஆனால், நோய் தொற்று வேகமாக பரவி வரும் வடசென்னை பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் இதனை கண்டுகொள்ளாமல் வெளியில் சுற்றித் திரிகின்றனர். இதன் மூலம் பொதுமக்களுக்கு வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

 சென்னையில் கொரோனா  பாதிப்பு அதிகம் பாதித்த மண்டலங்களில் தண்டையார்பேட்டை மண்டலம் 2வது இடத்தில் உள்ளது. இந்த மண்டலத்தில் 4 ஆயிரத்து 676 பேர் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 2,354 பேர் குணமடைந்துள்ளனர். 2,322 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 67 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த மண்டலத்தில் நோய்  தொற்று உள்ள வீடுகளில் ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டப்பட்டுள்ளது. ஆனால்,  தடுப்புகள் அமைக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் செய்யவில்லை என்ற  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர், ராஜரத்தினம் நகர், எம்கேபி நகர், எழில் நகர் கொருக்குப்பேட்டை மூப்பனார் நகர் ஆகிய பகுதிகளில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்காமல் வீட்டிலிருந்து வெளியே வருவது, கும்பலாக கூடி தாயம் விளையாடுவது, தெருக்களில் வலம் வருவது, கூட்டமாக நின்று அரட்டை அடிப்பது, விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

 மேலும் வீட்டின் வெளியே தகரம் அடித்தால் அதை எடுத்து போட்டுவிட்டு பக்கத்து வீட்டு திண்ணையில் சென்று உட்கார்ந்து தாயம் விளையாடுவதும், அவர்களிடம்  கேட்டால், எங்களுக்கு ஒன்றும் இல்லை. நாங்கள் ஆரோக்கியமாக தான் உள்ளோம். எங்களை 15 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவ்வளவுதான் என மாநகராட்சி அதிகாரிகளிடம் தொற்று பாதித்தவர்கள் கூறுகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, இதுபோன்ற பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கண்டிப்பாக வீடுகளை விட்டு வெளியே வராதவாறு  ஒவ்வொரு வீட்டின் வெளியே தகரம் அடித்து அவர்களிடம்  கண்டிப்பு காட்ட வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : houses ,zone , Chennai, corona , Stickers ,awareness
× RELATED நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு...