×

மணல் கொள்ளை, முறையாக தூர்வாராததால் கடை மடைக்கு தண்ணீர் செல்வதில் தாமதம் 7 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி கேள்விக்குறி

 * 15 நாளுக்கு முறைப்பாசனம் வேண்டாம்
* டெல்டா விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சை : மணல் கொள்ளை, முறையாக தூர்வாரததால் கடைமடைக்கு தண்ணீர் செல்வதில் தாமதம் ஏற்படுவதால் 7 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளன. 15 நாளுக்கு முறைப்பாசனம் வேண்டாம் என டெல்டா விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மேட்டூர் அணை நீரை நம்பி தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட தமிழகத்தில் 11 மாவட்டங்கள், புதுச்சேரியில் காரைக்கால் பகுதியில் நெல் மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 7 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி மற்றும் பிறபயிர்கள் 42 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்படுகிறது. சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டு ஜனவரி 28ம் தேதி மூடப்படும். அதன்படி, இந்தாண்டில் ஜூன் 12ம்தேதி அணை திறக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை சாகுபடிக்காக அணை திறக்கப்பட்டதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மகிழ்ச்சி பெரும்பாலான விவசாயிகளிடம் இல்லை. இதற்கு காரணம் தூர்வாரும் பணிகள் அரைகுறையாக நடந்ததாகவும், மணல் கொள்ளை பள்ளங்களால் நீரோட்டத்தில் தடை எனவும் விவசாயிகள் கருதுகின்றனர். இந்தாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.67.25 கோடி செலவில் 392 தூர்வாரும் பணிகள் நடந்தது. இந்த பணிகள் முழுமையாக முடிந்து விட்டது என்று பொதுப்பணித்துறை தரப்பில் கூறினாலும், 50 சதவீத அளவுக்குதான் பணிகள் முடிந்துள்ளது என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கல்லணையில் இருந்து பாசனத்துக்கு 16ம்தேதி திறக்கப்பட்ட தண்ணீர், நேற்றைய நிலவரப்படி நாகையை தொட்டிருக்க வேண்டும். ஆனால் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைதான் தாண்டி உள்ளது. அக்டோபர் 20ல் வடகிழக்கு பருவமழை துவங்கி விடும். அதற்குள் குறுவை அறுவடையை முடிக்க வேண்டும் என்றால் உரியகாலத்தில் தண்ணீர் கிடைக்க வேண்டும். எனவே கடைமடைக்கு போதிய தண்ணீர் கிடைப்பதை பொதுப்பணித்துறை, வேளாண்துறை, வருவாய்த்துறை உறுதிப்படுத்த வேண்டும். இதேபோல் தண்ணீர் மட்டுமின்றி விதை நெல், உரம், கூட்டுறவு பயிர் கடன் போன்றவைகளும் நிபந்தனையின்றி விவசாயிகளுக்கு கிடைக்க செய்ய வேண்டும் என விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்துகின்றனர்.
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், ‘‘டெல்டா மாவட்ட கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கூட்டறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடனுக்காகவும் விவசாயிகள் ஏங்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு எந்தவித நிபந்தனையில்லாமல் கடன் வழங்கினால் குறுவை உள்ளிட்ட பயிர்சாகுபடி செய்வதற்கு உதவியாக இருக்கும். காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மணல் கொள்ளை காரணமாகவே நீரோட்டம் தடைபட்டு தண்ணீர் மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. எனவே, மேட்டூரில் 18,000 கனஅடி திறக்க வேண்டும். கல்லணையில் இருந்து 15 நாட்களுக்கு முறைப்பாசனம் அமல்படுத்தக்கூடாது’’ என்று கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் ஜீவக்குமார் கூறுகையில், ‘‘காவிரி டெல்டாவில் 1625 ஏ பிரிவு வாய்க்கால்களும், 28,500 பி.சி. பிரிவு வாய்க்கால்களும் உள்ளன. இதுதவிர ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன ஏரிகள், குளங்கள் உள்ளன. இவற்றில் தடையின்றி தண்ணீர் போய் சேர வேண்டும். அப்படி சேர்ந்தால்தான் குறுவை சாகுபடியை எதிர்பார்த்த அளவு மேற்கொள்ள முடியும். ஆனால் தூர்வாரும் பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை. எனவே, டெல்டா விவசாயிகளையும், விவசாயத்தையும் அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்தால் வரக்கூடிய காலங்களில் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கும்’’ என்று எச்சரித்தார். காவிரி டெல்டா  பாசன பகுதிகளில் மணல் கொள்ளை காரணமாகவே நீரோட்டம் தடைபட்டு தண்ணீர் மெதுவாக வந்து கொண்டிருக்கிறது.


Tags : Sand burglary,Delta,kadaimadai,Cross Cultivation , Thanjavur
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...