×

சொந்த ஊர் போக முடியாமல் பெங்களூருவில் சிக்கித் தவித்த தமிழக தேயிலை தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தினகரன் நாளிதழ்: உயிருள்ள வரை மறக்க மாட்டோம் என நெகிழ்ச்சி

பெங்களூரு : தமிழகத்தை சேர்ந்த தேயிலை தோட்ட கூலி தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பெங்களூருவில் சிக்கி தவித்ததை அறிந்த தினகரன் நாளிதழ் ஊழியர்கள் கர்நாடகா மற்றும் தமிழக அதிகாரிகள் உதவியுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருப்பதால் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்து, சிக்கமகளூருவில் இருந்து 4 குழந்தைகள் உள்பட 29 பேர் பெங்களூரு வந்தனர். இங்கிருந்து கர்நாடகா-தமிழக எல்லையில்் உள்ள அத்திபள்ளி வழியாக தமிழகம் செல்ல முடியாமல் இரவு நேரத்தில் பசியும் பட்டினியுமாக பெங்களூரு கெம்பேகவுடா பஸ் நிலையத்தில் தவித்து வந்தனர்.

இது குறித்த தகவல் தினகரன் நாளிதழில் பணியாற்றும் ஊழியர்களின் கவனத்திற்கு வந்தது. உடனடியாக அவர்களை சந்தித்து விவரம் கேட்டறிந்து, பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் பேசினர். இரவு 9 மணிக்கு மேல் பஸ் சேவை நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொழிலாளர்களின் நிலையை அதிகாரிகளிடம் விளக்கி, பஸ் வசதி செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.தொழிலாளர்களின் கஷ்டத்தை புரிந்துகொண்ட மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் சீதாரெட்டி மற்றும் சர்மன் ஆகியோர் விதிமுறையை தளர்த்தி நள்ளிரவில் கூலி தொழிலாளர்களை மாநகர பேருந்தில் அத்திபள்ளி சோதனைச்சாவடி வரை அனுப்பி வைத்தனர்.  தினகரன் நாளிதழ் ஊழியர்கள், தொழிலாளர்களை அங்குள்ள கண்காணிப்பு அதிகாரிகளிடம் பேசி, உணவு பொருட்கள் வழங்கி ஓசூர் எல்லையில் உள்ள ஜூஜூவாடி  அரசு பள்ளியில் இரவு தங்க வைத்தனர். அவர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவுகளை கிராம நிர்வாக அதிகாரி தண்டபாணி, கவுன்சிலர்

ஸ்ரீ தரன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.


அதை தொடர்ந்துநேற்று  காலை ஓசூர் தாலுகா தாசில்தார் வெங்கடேசன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டருடன் தொடர்பு கொண்டு பேசி, தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ் மூலம் தொழிலாளர்களின் சொந்த ஊருக்கு இலவசமாக அனுப்பி வைத்தனர். இக்கட்டான நேரத்தில் எப்படி சொந்த ஊருக்கு செல்வது என்று திக்கு தெரியாமல் இருந்த தங்களுக்கு நீங்கள் செய்த உதவியை உயிருள்ளவரை  மறக்க மாட்டோம் என்று தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தினகரன் ஊழியர்களுக்கும், பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மனித நேய பணி


இதுகுறித்து ஓசூர் தாசில்தார் வெங்கடேசன் கூறும்போது, ‘‘கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணியை தொடர்ந்து ஒரு வாரமாக மேற்கொண்டு வருகிறோம். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வழிகாட்டுதல்படி பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் தொழிலாளர்கள் எந்த சிரமமும் இல்லாமல் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதையேற்று செயல்படுத்தி வருகிறோம். இன்று (நேற்று) பெங்களூருவில் இருந்து வந்த தொழிலாளர்களை அரசு பேருந்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம். இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரிடம் பேசி அனுமதி பெற்ற பின் அனுப்பியுள்ளோம். மனித நேய அடிப்படையில் இந்த பணியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்’’ என்றார்.

Tags : Helping Tea Workers ,Tamil Nadu Workers ,Bangalore , Bangalore ,Bangalore ,workers,Bangalore team workers
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...