×

திட்டமிட்டு சீனா நடத்திய தாக்குதல்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி : கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் 20 பேரை சீன ராணுவம் கொன்ற விவகாரத்தில், மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ‘சீன எல்லைக்கு இந்திய வீரர்கள் ஆயுதங்கள் இன்றி ஏன் அனுப்பப்பட்டனர்?’ என நேற்று முன்தினம் அவர் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், நேற்று அவர் ‘வீரர்களை காட்டிக் கொடுக்கிறது பாஜ,’ என்ற ஹேஸ்டேக்குடன் புதிய டிவிட்டர் பதிவை வெளியிட்டார். அதில், ‘அரசின் மூத்த அமைச்சர்கள் பிரதமரை பாதுகாப்பதற்காக பொய் கூறுவது வருத்தம் அளிக்கிறது. உங்களின் பொய்களால் இந்திய வீரர்களின் தியாகத்தை அவமானப்படுத்தி விடாதீர்கள்,’ என குறிப்பிட்டுள்ளார். இத்துடன், வீரமரணம் அடைந்த வீரர் ஒருவரின் தந்தை, ‘சீன வீரர்களால் தாக்குதல் நடத்தப்பட்டபோது இந்திய வீரர்கள் ஆயுதமின்றி இருந்தனர்,’ என கூறியுள்ள வீடியோ பதிவையும் இணைத்துள்ளார்.

இந்திய வீரர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கவே, வீரரின் தந்தை கூறிய பதிவை ராகுல் பதிவிட்டுள்ளார். முன்னதாக, ராகுல் வெளியிட்ட வேறொரு டிவிட்டர் பதிவில், ‘கல்வான் பள்ளத்தாக்கில் முன்கூட்டியே திட்டமிட்டு சீன ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் நடத்தப்படும்போது  இந்திய அரசு வேகமாக தூங்கிக் கொண்டிருந்தது. இதற்கு நமது வீரர்களின் உயிர் விலையாக கொடுக்கப்பட்டுள்ளது,’ என்று குற்றம்சாட்டி உள்ளார்.


Tags : Rahul Gandhi ,attack ,Soldiers ,China China ,Indian , Rahul gandhi,Ladakh Border,China,India, COngress leader
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...