×

பொம்மை, மருந்து மூலப்பொருட்கள் முதல் மொபைல் போன் வரை வாழ்க்கையின் அங்கமாக பின்னிப் பிணைந்த சீனப் பொருட்களை புறக்கணிப்பது சுலபமல்ல

* உள்நாட்டு உற்பத்தியில் துரித கவனம் தேவை
* கவலையை வெளிப்படுத்தும் தொழில் துறையினர்

சென்னை : இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான கலாச்சார, பொருளாதார உறவு பல நூற்றாண்டுகளாக நீடிக்கிறது. ஆனால், லடாக் எல்லைப் பிரச்சினை தலை தூக்கத் தொடங்கியதில் இருந்து, ‘சீனப் பொருட்களை பகிஷ்கரிப்போம்’ என்ற குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. சீனாவின் மொபைல் ஆப்ஸ்களை நீக்க உருவாக்கப்பட்ட ’ரிமூவ் சைனா ஆப்ஸ்’’’’ 50 லட்சத்துக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டது. ஆனால், கொள்கைக்கு விரோதமாக உள்ளதாக கூறி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த ஆப்ஸ் நீக்கப்பட்டுவிட்டது.  இதேபோல், சீன பொருட்களை புறக்கணிப்போம் என கெயிட்’’ எனப்படும், அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு, அறைகூவல் விடுத்துள்ளது. சீனாவிலிருந்து 3,000 பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக கூறியுள்ள இந்த அமைப்பு, இவற்றில் 450- 500 பொருட்களை உள்நாட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.  சீனாவுக்கு எதிராக இப்படி பல்வேறு தரப்பினரும் வரிந்துகட்டி இறங்கியுள்ள சூழ்நிலையில், சீனப் பொருட்களை புறக்கணிப்பது அவ்வளவு சுலபமல்ல என்று தொழில் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. அந்தளவுக்கு பொம்மை முதல் மொபைல் போன் வரை சீனப் பொருட்கள் நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே பின்னிப் பிணைந்து விட்டன.

 உதாரணமாக, இந்தியாவில் விற்பனையாகும் மொபைல் போன்களில் பெரும்பாலானவை சீன தயாரிப்பு தான். எலக்ட்ரானிக் பொருட்கள் சந்தையில் சீனா பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்திய மொபைல் சந்தையில் மிகப்பெரிய இடத்தை சீன நிறுவனங்கள் பிடித்துவிட்டன. 90 சதவீத மொபைல் உதிரி பாகங்கள் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் இறக்குமதியாகும் எலக்ட்ரானிக் பொருட்களில் 45% சீனாவில் இருந்து வருகிறது.
 மருந்து தயாரிப்புக்கு தேவையான முக்கிய மூலப் பொருட்களுக்கும் சீனாவைத்தான் நாம் நம்பியுள்ளோம். இதனால்தான், சீனாவில் கொரோனா பரவல் தீவிரமான போது, இந்தியாவில் பல்வேறு அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏனெனில், 65% முதல் 70% வரையிலான மருந்து மூலப்பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.  இதுபோல் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களில் நான்கில் ஒரு பகுதிக்கு மேல் சீனாவிலிருந்து வருகிறது.  சீனாவிலிருந்து சப்ளை தடைபட்டால் உற்பத்தி பாதிக்கப்படும் என்பதை, அங்கிருந்து பெரிய அளவில் இறக்குமதி செய்யும் மாருதி உள்ளிட்ட நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது மட்டுமன்றி, இயந்திர உதிரிபாகங்களில் 32 சதவீதம், பர்னிச்சர், படுக்கை விரிப்புகள் போன்றவை 57 சதவீதம், ஆர்கானிக் கெமிக்கல் 38 சதவீதம், உரங்கள் 28 சதவீதம் சீனாவில் இருந்துதான் இறக்குமதி ஆகிறது. கடந்த பிப்ரவரி இறுதியில் மத்திய அரசிடம்இந்திய தொழில்துறை கூட்டமைப்பு(சிஐஐ) சமர்ப்பித்த அறிக்கையில் இந்த விவரங்கள் உள்ளன.  சீனாவில் இருந்து சப்ளை பாதிக்கப்பட்டால் மொபைல், டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள், மருந்து விலை உயரும் அபாயம் உள்ளது. உதாரணமாக சீனாவிலிருந்து மருந்து மூலப் பொருட்கள் சப்ளை பாதிக்கப்பட்டதால், சில மூலப்பொருட்கள் விலை 6 சதவீதம் முதல் 167 சதவீதம் வரை அதிகரித்தது.  எனவே, இந்த அளவுக்கு சீனாவை இவ்வளவு காலமாக சார்ந்திருந்துவிட்டு, திடீரென அதிலிருந்து விலகுவது அவ்வளவு சுலபமல்ல என தொழில் துறையினர் கூறுகின்றனர்.  உள்நாட்டு உற்பத்தியை பெருக்க தேவையான அனைத்து உத்திகளையும் மத்திய அரசு வகுக்க  வேண்டும். அதோடு, சீனாவை சார்ந்திருப்பதிலிருந்து விடுபடும் அளவுக்கு கொள்கை முடிவுகளை எடுத்து உள் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.

அதுவரை தற்காலிகமாக சீனாவுடனான வர்த்தக உறவுகள் பாதிக்காத வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிடில், ஊரடங்கால் முடங்கிய தொழில் துறைக்கு இது கூடுதல் பாதிப்பாக அமைந்து விடும்.


 தற்சார்பு பேச்சளவில் நின்றுவிடக் கூடாது. செயலிலும் துரித வேகம் காட்ட வேண்டும். அதுவரை, சீன ஆதிக்கத்தில் இருந்து நமது தொழில் துறைகள், சந்தைகள் விடுபடுவது கானல் நீராகி விடும் அபாயம் உள்ளது என தொழில் துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.

சீனாவை புறக்கணிப்பதால் விலை உயரும் பொருட்கள்


* ரூ. 2 லட்சம் கோடி இந்தியாவின் மொபைல் போன் சந்தையில், 72% சீன தயாரிப்பு தான் ஆக்கிரமித்துள்ளது.
* ரூ.12,000 கோடி தொலைத்தொடர்பு சாதனம் சந்தையில், சீனாவின் பங்களிப்பு 25 சதவீதத்துக்கு மேல்.
* ஸ்மார்ட் டிவி சந்தையில் சீனாவின் ஆதிக்கம் 45 சதவீதம். காரணம், சீனா அல்லாத பிற நாட்டு தயாரிப்புகள் விலை இதைவிட 30 சதவீதம் முதல் 50 சதவீதம் அதிகம்.
* ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் 25 சதவீதத்துக்கு மேல் சீனாவில் இருந்து இறக்குமதி ஆகிறது. பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் கூட சீன உதிரி பாகங்களை தான் நம்பி உள்ளன.
* சீனாவிலிருந்து சப்ளை தடைபட்டதால், கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை மருந்து மூலப்பொருட்கள் விலை ஆறு சதவீதம் முதல் 167 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
* எனவே இந்தியாவில் மலிவு விலையில் உற்பத்தி செய்வதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தாமல் சீன  சார்பு நிலையிலிருந்து விடுபட்டால், மேற்கண்ட பொருட்களின் விலை உயர்வை தவிர்க்க முடியாது.
* தற்போது சீனாவிலிருந்து சப்ளை பாதிக்கப்பட்டதால் அதிகம் விற்பனையாகும் சீன மொபைல் போன்கள் ஸ்டாக் இல்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

வர்த்தக பற்றாக்குறை அதிகம்

இந்தியாவில் இருந்து சீனாவுக்கு பருத்தி, நூல், தாதுப் பொருட்கள், முத்து  மற்றும் ராசி கற்கள், துணி வகைகள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீனாவிலிருந்து  இந்தியாவுக்கு எலக்ட்ரானிக் பொருட்கள், மின்சாதனங்கள், சோலார் மின் உற்பத்திக்கான உதிரி பாகங்கள், மருந்து மூலப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.  வர்த்தக அமைச்சக புள்ளிவிவரப்படி கடந்த ஆண்டில் சீனாவுடனான வர்த்தகம் ₹608,000 கோடி). கடந்தாண்டு ஜனவரி - நவம்பர் இடையே வர்த்தகம் ₹ 640,680 கோடி.  அதற்கு முந்தைய ஆண்டை விட 3.2 சதவீதம் குறைவு.  மொத்த இறக்குமதியில் சராசரியாக சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி ஆவது 16 சதவீதம்.  ஆனால், இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி ஆவது 3.2 சதவீதம் மட்டுமே. எனவே,  இந்தியாவில் சீன ஆதிக்கம் செலுத்துவதை உணர இதுவே சிறந்த சான்று.

விளம்பரத்துறையும் பாதிப்பில் இருந்து தப்பாது


* தொழில் துறை மட்டுமின்றி விளம்பர வருவாயும் சீன நிறுவனங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
* சீனாவின் ஷாமி மொபைல் விற்பனை இந்தியாவில் சக்கைப்போடு போடுகிறது. 2018ல் இந்தியாவில் விளம்பர பங்களிப்பில் டாப் 50 இடத்தில் இருந்த இந்த நிறுவனம், விளம்பரத்துக்காக செலவழித்த தொகை ₹200 கோடி.. அப்போது விளம்பரத்தில் டாப் 10 இடத்திற்குள் நுழைந்த ஒரே சீன நிறுவனம் இது.
* பின்னர் வோப்போ நிறுவனம் டாப் 10 பட்டியலுக்குள் வந்தபோது, ஷாமி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.
* விவோ நிறுவனம் கடந்த ஆண்டு விளம்பரத்துக்கு செலவழித்த தொகை ₹700 கோடி. 2018ல் 9வது இடத்தில் இருந்த இது கடந்த ஆண்டு 2வது இடத்துக்கு வந்துவிட்டது 2018ல்
* 650 கோடி செலவு செய்துள்ளது
* மொபைல் போன்களுக்கான விளம்பரத்தில் சுமார் 80 சதவீதம் சீன நிறுவனங்களின் பங்களிப்பாக உள்ளது.
* கடந்த ஆண்டின் மொத்த விளம்பர செலவில், டாப் 50 நிறுவனங்களின் பங்களிப்பு 33 சதவீதம்.

Tags : Chinese , China, India, Indiachina faceoff, China products
× RELATED உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு...