×

முழு ஊரடங்கால் சென்னை முடங்கியது: முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் கடும் கண்காணிப்பு

* வெளியில் சுற்றிய 2436 பேர் மீது வழக்கு l 1997 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கால் சென்னை முழுவதுமாக முடங்கியது. தடையை மீறி சென்ற 2,436 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 1,997 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் வைரஸ் தாக்குதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உயிர் பலிகளும் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் நேற்று வரை 666 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் சென்னையில் மட்டும் 529 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பீதி காரணமாக, சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனவே, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இது, நேற்று முன்தினம் நள்ளிரவு அமலுக்கு வந்தது. நேற்று காலையில் ஓரளவு கடைகள் திறந்திருந்தன. ஆனால் 10 சதவீதம் மட்டுமே வாகனங்கள் இயங்கின. இரு சக்கர வாகனங்கள் அதிகமாக சென்றன. பிற்பகல் 2 மணிக்கு பிறகு அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. அதைதொடர்ந்து வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. அண்ணா சாலை, ஈவெரா சாலை, காமராஜர் சாலை, 100 அடி சாலைகள், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ராஜிவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை என அனைத்து முக்கிய சாலைகளும் மூடப்பட்டன. தவிர, முக்கிய சாலைகளை இணைக்கும் சாலைகளும் மூடப்பட்டிருந்தன. சாலைகளில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். சென்னை மாநகரம் முழுவதும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 288 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டன.

அரசு அனுமதி அளித்த நபர்கள் வந்த வாகனங்களை தவிர மற்ற வாகனங்களில் வரும் நபர்கள் மீது நேற்று அதிகாலை முதலே போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். அதிகாலையில் கூட்டம் அதிகமாக காணப்படும் காய்கறி சந்தைகள் மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகளில் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.மக்கள் நெரிசலாக வசிக்கும் பகுதிகள் மற்றும் நோய் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் ட்ரோன் மூலம் போலீசார் மக்கள் வெளியே சுற்றுவதை கண்காணித்தனர். அரசு அலுவலகங்களுக்கு செல்வோர் மற்றும் அரசு அனுமதி அளித்த நபர்கள் அனைவரின் அடையாள அட்டைகளை பரிசோதனை செய்த பிறகே போலீசார் அனுமதித்தனர். சென்னையில் முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டதால் அரசு அலுவலகம் செல்வோர் உட்புற சாலை வழியாக பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று ஒரே நாளில் 2,436 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 1,997 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இதற்கிடையே திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் வாகன சோதனை மையத்தில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் காலை ஆய்வு செய்தார். அப்போது, வாகனங்களின் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா மூலம் நேரடியாக கண்காணித்தார். மேலும், நேற்று மாலை அமைந்தகரை மற்றும் அண்ணா ஆர்ச் பகுதியில் உள்ள வாகன சோதனை சாவடியில் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் 12 நாட்கள் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும். வெளியில் வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்க வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. அப்படி மீறி வாகனங்களில் வந்தால், நிபந்தனைகள் இன்றி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். சமூக இடைவெளி இல்லாமல் நோய்த்தொற்று பரவும் சூழல் இருந்தால் சம்பந்தப்பட்ட கடைகள் மூடப்படும். நோய் தொற்றை குறைக்கும் வகையில் இந்த முறை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இன்னும் 11 நாட்கள் மக்கள் சிரமம் பார்க்காமல் முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண், கூடுதல் கமிஷனர்களான தினகரன், ஜெயராமன் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சுதாகர், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தர்மராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

முதல்முறையாக ட்ரோனில் ஒலிபெருக்கி
சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக ட்ரோன் கேமராவில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டது. கேமரா மேலே பறக்கும் போது காவல் துறையின் எச்சரிக்கை வாசகங்கள் ஒலிக்கப்பட்டது. இதன் மூலம் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுக்கப்பட்டது. இந்த ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட ட்ரோன் கேமராவை மாநகரில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.

* சென்னை மாநகரில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாகனங்களில் சென்றவர்கள் மீது போலீசார் தனியாக 989 வழக்குகள் பதிவு செய்து அபராதம் வசூலித்தனர்.
* 144 தடை உத்தரவை மீறியதாக மாநகரம் முழுவதும் 1,883 இரு சக்கர வாகனங்கள், 67 ஆட்டோக்கள், 47 கார்கள் என மொத்தம் 1,997 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags : Chennai ,roads , entire curfew ,crippled ,Chennai
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...