×

லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட மோதல் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது..!!

டெல்லி: லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா,  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோர் கலந்துக்கொண்டு இருக்கின்றனர். மேலும் கட்சிகளை பொறுத்தவரையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மற்றும் மாநிலங்களவையில் 5 உறுப்பினர்களை வைத்திருக்கக் கூடிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கட்சித்தலைவர்கள் பங்கேற்றுள்ளதை அடுத்து சீனா உடனான பிரச்சனை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீதாராம் யெச்சூரி, பிஜு ஜனதாதளம் சார்பில் நவீன் பட்நாயக், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் ஜெகன்மோகன் ரெட்டி, சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத் பவார், சமாஜ்வாதி சார்பில் அகிலேஷ் யாதவ் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் லடாக் எல்லைப்பகுதியில் தற்போது நிலவக்கூடிய சூழல்கள், கடந்த 15, 16ம் தேதிகளில் ஏற்பட்ட மோதலில் எந்த மாதிரியான சூழல் நிலவியது தொடர்பாக மத்திய அரசு சார்பில் எதிர்க்கட்சிகளுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. குறிப்பாக இந்த விவகாரத்தில் தூதரக ரீதியில் எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் விளக்கம் அளிக்க உள்ளார்.

இதனையடுத்து ராணுவ ரீதியில் எல்லைப்பகுதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிக்க உள்ள நிலையில் மேற்கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து உள்துறை மத்திய அமைச்சர் அமித்ஷா எதிர்க்கட்சிகளுக்கு எடுத்துரைக்க உள்ளார். எதிர்க்கட்சிகள், இவை அனைத்தையும் ஆராய்ந்து ஆலோசனை நடத்திய பிறகு தங்களுடைய கருத்துக்களையும் மத்திய அரசிடம் தெரிவித்து லடாக் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மோதல் குறித்து ஓர் விரிவான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Modi ,Calvan Valley ,China ,Ladakh ,meeting ,valley ,border dispute ,party meeting , Ladakh border, China, conflict, Prime Minister Modi, all-party meeting, started
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...