×

வாட்ஸ் அப் வதந்தியால் திருப்போரூரில் மீண்டும் களை கட்டிய டாஸ்மாக் கடைகள்

*சரக்கு காலியானதால் குடிமகன்கள் ஏமாற்றம்

திருப்போரூர் : இன்று முதல் சென்னையில் முழுமையாகவும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில இடங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலூர், படூர் ஆகிய திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய 50 கிராமங்கள் சேர்க்கவில்லை.

மாவட்டம் முழுவதும் ஊரடங்கு என தகவல் பரவியதால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என நேற்று முன்தினம் முதலே வாட்சப் வதந்திகள் றெக்கை கட்டி பறக்கத் தொடங்கின. இதனால் நேற்று காலை குடிமகன்கள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட தொடங்கினர். இதனால் வழக்கத்தை விட, பல கடைகளில் கூட்டம் அதிகரித்தது.

காலை முதலே அதிகளவில் கூட்டம் வந்ததால் மதியம் 2 மணிக்கு முன்னதாகவே, திருப்போரூரில் இருந்த 2 டாஸ்மாக் கடைகளில் சரக்குகள் காலியானது. மற்ற 2 கடைகளில் மட்டும் ஏராளமான குடிமகன்கள் வரிசையில் நின்று சரக்கு வாங்கிச் சென்றனர்.டாஸ்மாக் கடைகளில் நிறுத்தி வைக்கப்பட்ட டோக்கன்கள், அவர்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டன. பின்னர், அந்த கடைகளிலும் சரக்குகள் தீர்ந்ததும், மாலை 6 மணியளவில் 2 கடைகளுக்கும் சரக்கு சப்ளை செய்யப்பட்டது.  

இந்நிலையில் சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் சென்னையை ஒட்டி உள்ள புறநகர் பகுதி டாஸ்மாக் கடைகளை மூட மாமல்லபுரம் கூடுதல் எஸ்பி சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாவலூர், படூர், தாழம்பூர், கேளம்பாக்கம், தையூர், மாம்பாக்கம், கண்டிகை, கோவளம் ஆகிய இடங்களில் உள்ள 13 கடைகள் இன்று முதல் 30ம் தேதி வரை மூடப்படும்.

செங்கல்பட்டு மாவட்ட அளவில் மொத்தம் 43 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. திருப்போரூர், ஆலத்தூர், வெங்கூர், கொட்டமேடு, பூஞ்சேரி, நெம்மேலி, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் உள்ள கடைகள் மட்டுமே செயல்படும்.

Tags : shops ,Tasmac , Whats app Rumor about reopen of Tasmac shops
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் டாஸ்மாக் இடமாற்றம் செய்ய கோரிக்கை