×

லடாக்கில் ஆயுதங்கள் இன்றி உயிர் தியாகம் செய்ய வீரர்களை அனுப்பியது ஏன்?

*மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி

புதுடெல்லி : ‘லடாக்கில் ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்கள் ஏன் உயிர்த் தியாகம் செய்வதற்கு அனுப்பப்பட்டனர்?’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த திங்களன்று இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இது, நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவத்துக்கு பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் பற்றி மத்திய அரசுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு கேள்விகள் எழுப்பி வருகிறார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘இந்திய வீரர்கள் ஏன் ஆயுதங்கள் இன்றி உயிர் தியாகம் செய்வதற்கு அனுப்பப்பட்டார்கள்? இந்திய வீரர்களை கொல்வதற்கு சீனாவுக்கு என்ன துணிச்சல்? இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பான உங்களின் (பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்) டிவிட்டர் பதிவில், சீனாவின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை? இது, மிகுந்த வலியை தருவதாக உள்ளது. மேலும், இந்திய வீரர்களை அவமதிக்கும் செயலாகும். 2 நாட்கள் கழித்து இறந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்தது ஏன்? வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ள இந்த இக்கட்டான நேரத்தில் ஏன் பேரணிகளில் பேசுகிறீர்கள்?’ என கேட்டுள்ளார்.  

முன்னதாக, கடந்த திங்கள் இரவு வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், புதன்கிழமை ராஜ்நாத் சிங் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘கல்வான் பள்ளத்தாக்கில் 20 வீரர்களை இழந்தது மிகவும் வலியை ஏற்படுத்துகிறது,’ என்று பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்ததக்கது. இதை தான் நேற்றைய தனது டிவிட்டரில் ராகுல் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

இரும்பு தடியால் தாக்குதலா?

பதில் சொல்ல சீனா மறுப்புலடாக் சம்பவத்தில் பலியான சீன வீரர்கள் எண்ணிக்கையை வெளியிடாமல் சீனா தொடர்ந்து மறைத்து வருகிறது. அந்நாட்டின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் லிஜியன் தொடர்ந்து 2வது நாளாக இதற்கு பதில் அளிக்கவில்லை. அதோடு, இந்திய வீரர்கள் மீது இரும்பு தடி, ஆணிகள் பொருத்திய தடிகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து கேட்ட கேள்விக்கும் பதிலளிக்காமல் தவிர்த்தார்.

‘‘இந்த விஷயத்தில் எது சரி, எது தவறு என்பதில் தெளிவாக உள்ளோம். சீன தரப்பு மட்டும் பொறுப்பில்லை,’’ என்றார் அவர். மேலும், கல்வான் ஏரிப்பகுதியில் தண்ணீரை தடுக்க சீனா அணை கட்டுவதாக செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியானது குறித்து கேட்டதற்கு, ‘‘அப்படிப்பட்ட விஷயத்தை நான் கேள்விப்படவில்லை,’’ என்றார்.

பாஜ நிகழ்ச்சிகள் 2 நாட்கள் ரத்து  

பாஜ தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘லடாக்கில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அடுத்த 2 நாட்களுக்கு பாஜ.வின் அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. கல்வான் பள்ளத்தாக்கில் தாய் மண்ணை காப்பதற்காக தைரியமிக்க வீரர்களின் உயிர் தியாகம் எப்போதும் நினைவு கூரத்தக்கது. இந்த நாடு வீரர்களுக்கு கடன்பட்டுள்ளது.’ என கூறியுள்ளார்.

வீரர்கள் ஆயுதம் வைத்திருந்தனர் வெளியுறவு அமைச்சர் விளக்கம்


ராகுலின் கேள்விக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது பதிவில், ‘எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து ராணுவ வீரர்களும் ஆயுதம் ஏந்தியே உள்ளனர். கல்வானிலும் வீரர்கள் ஆயுதத்துடனே உள்ளனர். ஆனால், 1996 மற்றும் 2005ல் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, சீனா உடனான எல்லை மோதலில் ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால்தான், ஆயுதத்தை வீரர்கள் பயன்படுத்தவில்லை,’ என கூறியுள்ளார்.

Tags : soldiers ,Ladakh , Without weapons in Ladakh Why send soldiers to sacrifice life?
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை