×

ஒரே நாளில் 18 பேர் பாதிப்பு கோவை நகர், புறநகர் பகுதியில் வேகமாக பரவுகிறது கொரோனா

கோவை:  கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வையடுத்து வெளியூர், வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு விமானம், ரயில், கார் உள்ளிட்டவை மூலம் வரும் நபர்களின் மூலம் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூரில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், அப்பகுதியை சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களில் மாநகராட்சி பகுதியில் மட்டும் 1,500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பலரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவில்லை.  

மாவட்ட சுகாதாரத்துறையின் மூலம் நேற்று வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில் நேற்று 18 ேபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் கொரோனாவுக்கு உயிரிழந்த ஆர்.ஜி.புதூர் நபருடன் தொடர்புடைய சின்னியம்பாளையத்தை சேர்ந்த  27 வயது ஆண், 24 வயது ஆண், 53 வயது பெண், 20 வயது ஆண், சின்னிம்பாளையத்தில் துணிக்கடை நடத்தி வந்த மயிலம்பட்டியை சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் மற்றும் அவரின் 35 வயது மனைவி என மொத்தம் 6 பேர் அடங்குவர். இவர்கள் தவிர கோவை உடையாம்பாளையத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 30 வயது பெண், அவரின் 3 வயது ஆண் குழந்தை மற்றும் ரயில் மூலம் கோவை வந்த சரவணம்பட்டியை சேர்ந்த 27 வயது ஆண், பொள்ளாச்சி குப்பே கவுண்டன்புதூரை சேர்ந்த 82 வயது ஆண், ஆனைமலை சுங்கத்தை சேர்ந்த 67 வயது ஆண், சமத்தூரை சேர்ந்த 70 வயது ஆண், கோவா சென்று வந்த கணுவாய் சேர்ந்த 65 வயது பெண்,

கோவை அரசு மருத்துவமனையின் ஐ.எல்.ஐ வார்டில் பரிசோதனை செய்த தெலுங்குபாளையம் சேர்ந்த 33 வயது ஆண், போத்தனூர் சேர்ந்த 82 வயது பெண், வெள்ளலூர் அடுத்த சித்தானந்தபுரத்தை சேர்ந்த 39 வயது ஆண், நீலகிரிக்கு சென்று வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 54 வயது ஆண் மற்றும் சென்னையில் இருந்து பொள்ளாச்சி நடுபுனி வந்த நபரின் மூலம் அவரின் 3 வயது குழந்தை ஆகிய 12 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 211ஆக உயர்வு
கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 188 என இருந்தது. இந்நிலையில், நேற்று தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 211ஆக உயர்ந்துள்ளது.

23 பேருக்கு தொற்று
கொரோனாவால் கோவை ஆர்.ஜி. புதூரை சேர்ந்த வாலிபர் இறந்தார். இதையடுத்து சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூர் பகுதியில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களில் சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூரில் மொத்தம் 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

டெல்லி விமானத்தில் வந்த 14 பேருக்கு கொரோனா
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் மதுரையை சேர்ந்த 4 பேர், விருதுநகரை சேர்ந்த 3 பேர், சேலம் 2 மற்றும் தென்காசி, நீலகிரி, திருப்பூர், திருவாரூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர். இவர்கள், அனைவரும் அவர்களின் சொந்த ஊருக்கு சென்றுவிட்ட நிலையில், சம்மந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 பேர் டிஸ்சார்ஜ்
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு மொத்தம் 216 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், 101 ஆண்கள், 104 பெண்கள், 10 குழந்தைகள், ஒருவர் திருநங்கை. கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்து நேற்று 8பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Tags : Coimbatore ,Corona ,outskirts , Corona spreads,rapidly , outskirts , Coimbatore
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...