×

ஜப்பான் மீது பறந்தது வேற்றுகிரக வாகனமா?

டோக்கியோ : ஜப்பான் மீது பறந்தது வேற்றுகிரகவாசிகளின் வாகனமா என்பது தெரியாமல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எல்லா அரசு துறைகளும் இது தங்களுடையது அல்ல என்று மறுத்துவிட்டதால் மக்கள் இடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் சென்டாய் நகரின் மீது நேற்று முன்தினம் பலூன் போன்ற மிகப்பெரிய வெள்ளை உருவம் ஒன்று பறந்து சென்றது. இதை அந்நகரில் வசிக்கும் பலர் படம் பிடித்து, வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் வெளியிட்டு, இது பலூனா அல்லது வேற்றுகிரகவாசிகளின் வாகனமா என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.

பலர் அந்நாட்டு வானிலை ஆய்வு மையத்திடம், சம்பந்தப்பட்ட வெள்ளை உருவம், அவர்களின் ஆராய்ச்சி கருவியா என்று கேட்டனர். ஆனால், அதுபோன்ற எந்த கருவியையும் தாங்கள் பறக்கவிடவில்லை என்று அவர்கள் பதில் அளித்தனர். இதேபோல், பலர் போலீசில், வானத்தில் மர்மப் பொருள் பறப்பதாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ஹெலிகாப்டரில், அதை கவனிக்க புறப்பட்டனர். ஆனால், அவர்கள் சென்றபோது வானத்தில் அதுபோன்று எதையும் கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ஒரு சிலர் கியூஷூ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி பலூன் என்று தெரிவித்ததால், பலர் பல்கலையில் போன் போட்டு அது என்ன, ஏது என்று கேள்வி கேட்க ஆரம்பித்தனர். எனினும், பல்கலைக்கழக அதிகாரிகளும், அது தங்களுடைய ஆராய்ச்சி பலூன் அல்ல என்று தெரிவித்துவிட்டனர்.

ஒரு சில மணி நேரங்களில் இந்த தகவல் ஜப்பான் முழுவதும் பரவி, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றும் சில இடங்களில் அந்த பலூன் போன்ற உருவம் தென்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பலூன் உருவம் என்னவென்று ஜப்பான் அரசு தீவிரமாக தகவல்களை சேகரித்து வருவதாகவும், அது வெளிநாட்டு உளவு பலூனாக கூட இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பலூன் போன்ற உருவம் கடந்த இரண்டு நாட்களாக ஜப்பானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Japan , Is it an alien vehicle that flew over Japan?
× RELATED பேட்டரியில் இயங்கும் மருந்து...