×

சென்னையிலிருந்து மாற்று வழிகளில் தென்மாவட்டங்களுக்கு ரகசியமாக வருவோரால் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா தொற்று

தென்காசி: சென்னை உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து தென்மாவட்டங்களுக்கு மாற்று வழிகளில் ரகசியமாக  வருபவர்கள் தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறுவதால் கொரோனா தொற்று பரவல்  அதிகரித்துள்ளது. தென்மாவட்டங்களில் கடந்த ஏப்ரல் வரை மாவட்ட நிர்வாகம்,  சுகாதாரத் துறையினர், வருவாய் துறை, உள்ளாட்சி அமைப்பினர், காவல்துறையினர்  ஆகியோரின் கூட்டு முயற்சி காரணமாக கொரோனா தொற்று பெருமளவு  கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் இதுவரை  நோய்த்தொற்றுக்கு பலி எதுவும் இல்லை. துவக்கத்தில் நோய்த்தொற்று அதிகம் இருந்த  புளியங்குடியில் கூட அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக பரவல்  கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.

 தற்போது புலம் பெயர்ந்த  தொழிலாளர்கள், பயணிகள் மற்றும் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும்,  வெளிமாநிலங்களில் இருந்தும் தென்மாவட்டங்களுக்கு வரும் நபர்களுக்கு பெருமளவு  நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. குறிப்பாக சென்னையிலிருந்து  வருகின்றவர்கள் அதிக அளவில் நோய்த் தொற்றுடன் வருகின்றனர். சென்னையிலிருந்து வருகின்றவர்கள் 3 பிரிவினர்களாக உள்ளனர். வெளிநாடுகளில்  இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னை வந்து அங்கிருந்து அரசு  ஏற்பாடு செய்யும் வாகனங்கள் மூலம் தென்மாவட்டத்திற்கு சிலர்  வருகின்றனர். இவர்கள் முதல் பிரிவினர். அவ்வாறு வருகை தருகின்றவர்களை  மாவட்ட நிர்வாகம் அந்தந்த தாலுகாக்களில் அமைத்துள்ள மையங்களில்  தனிமைப்படுத்தி அவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சோதனையின்  அடிப்படையில் ‘பாசிட்டிவ்’ என்று வந்தால் மருத்துவமனைக்கும், ‘நெகட்டிவ்’  என வந்தால் மேலும் சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு  அறிவுறுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

 சென்னையிலிருந்து  இ-பாஸ் மூலம் சிலர் வருகை தந்துள்ளனர். இவர்கள் இரண்டாவது பிரிவினர்.  நேரடியாக தங்களது வீடுகளுக்கோ அல்லது உறவினர் வீடுகளுக்கோ வந்து தங்கி  விடுகின்றனர். பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இ-பாஸ் அனுமதியில் உள்ள  முகவரிகள் அந்தப்பகுதி வருவாய் துறை மற்றும் சுகாதாரத்துறை, உள்ளாட்சி  நிர்வாகம் ஆகியோரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் சம்பந்தப்பட்ட வீடுகளை  தேடி கண்டறிந்து அவர்களுக்கு சோதனை நடத்தும் போது ஒரு சிலருக்கு நோய்த்  தொற்று இருப்பது உறுதியாகிறது. நோய்த் தொற்று உறுதியானவர்கள் வசிக்கும் பகுதிகள்  முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு மேலும்  சிலருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டால் அந்த பகுதி தனிமைப்படுத்தப்படும்  நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது அங்கு வசிக்கும் மற்ற மக்களுக்கு  மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.

 இதேபோன்று பாஸ் இல்லாமல்  முறைகேடாக பல வழிகளிலும் தென்மாவட்டத்திற்கு வருகின்றவர்கள் மூன்றாவது  பிரிவினர். இவர்கள் மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் வழியாக வராமல் அதற்கு முன்னதாக உள்ள கிராமப்புற வழிகளை உறவினர்கள் மூலம் கேட்டறிந்து சொந்த ஊருக்கு சென்று விடுகின்றனர். இவர்களை கண்டறிவது அதிகாரிகளுக்கு சிரமமாக உள்ளது. அந்தப்  பகுதியில் உள்ள யாரேனும் சிலர் தகவல் கொடுத்தால் மட்டுமே அவர்களை கண்டறிய  முடியும் என்ற சூழல் உள்ளது. இவ்வாறு முறைகேடாக வந்தவர்கள் தனிமைப்படுத்தலை  மீறி சர்வ சுதந்திரமாக சுற்றி வருவதால் ெதன்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று  கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இவர்களை எவ்வாறு கண்டறிவது என மாவட்ட  நிர்வாகங்களும்ம், போலீசாரும் ஆலோசித்து வருகின்றனர்.

சாரலுக்காக வரும் சுற்றுலா பயணிகள்
குற்றாலத்தில் சீசன் துவங்கியதால் இதமான தென்றல் காற்றுக்காகவும்,  சாரலுக்காகவும் பலரும் வருகின்றனர். அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை  என்றாலும் பரவாயில்லை. சொந்த ஊருக்கும், தென்காசியில் உள்ள உறவினர்கள்  வீட்டிற்கும் சென்று ஓய்வெடுக்கலாம் என்ற அடிப்படையில் தமிழகம்  முழுவதிலிருந்தும் பலரும் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தருவதாக தகவல்கள்  வெளியாகி உள்ளது. இதனால் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த அதிகமான வாகனங்கள்  தென்காசி, குற்றாலம் பகுதிகளில் நடமாடுவதாக சமூக ஆர்வலர்களும் குற்றம்  சாட்டி வருகின்றனர். தென்காசியை பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் வசித்து  வந்த பலரும் தற்போது தென்காசிக்கு திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.  இதனால் கடந்த சில தினங்களாக தென்காசியில் வாடகை, ஒத்திக்கு வீடு தேடி  அலைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

டாக்டர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பு
வெளியூர்களில்  இருந்து ஊருக்குள்  வருபவர்கள் தனிமைப்படுத்தும் நடைமுறைகளை  கடைப்பிடிக்காமல் விவரங்களை  மறைத்து மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு  வருவதால் மருத்துவர்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகும்  நிலை உள்ளது. தமிழகத்தில் 2 மருத்துவர்கள் உள்பட இந்திய அளவில் கடந்த 10ம் தேதி  வரை 32 மருத்துவர்கள் கொரோனா தொற்று காரணமாக பலியாகி உள்ளனர். நர்ஸ்  உள்ளிட்ட பணியாளர்கள் 6 பேரும் மரணத்தை தழுவி உள்ளனர். சென்னையில் மட்டும்  100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை  பெற்றுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் நோய்த் தொற்றினால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த இளம் பெண்  மருத்துவர் ஒருவருக்கு  நோய் தொற்று ஏற்பட்டது மருத்துவர்கள் மத்தியில்  அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்களிடம் சிகிச்சைக்கு வரும் ஒவ்வொருவரையும்  சற்று எச்சரிக்கையுடன் விசாரித்து அவர் வெளியூர்களிலிருந்து வரவில்லை என்ற  தகவலை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே டாக்டர்கள் சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் உள்ளது.  இதனால் மருத்துவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கும் அச்சத்திற்கும்  ஆளாகியுள்ளனர். சிகிச்சை அளிப்பது தொடர்பாக  மருத்துவர்கள் தங்களுக்குள்  ஒருவருக்கு ஒருவர் கவுன்சிலிங் செய்து கொள்கின்றனர். மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் வழியாக வராமல் அதற்கு முன்னதாக உள்ள கிராமப்புற வழிகளை உறவினர்கள் மூலம் கேட்டறிந்து சொந்த ஊருக்கு சென்று விடுகின்றனர்.

Tags : South ,visitors ,Chennai , Coronavirus infection, clandestine ,visitors , Chennai ,alternate routes
× RELATED கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதி