×

யுஎஸ் ஓபன்-விளையாட வீரர்கள் தயக்கம்

நியூயார்க் : கொரோனா  தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருந்த  விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டு விட்டது.  பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி மே மாதத்திற்கு பதில்  செப்டம்பருக்கு தள்ளி  வைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்காவில் யுஎஸ் ஓபன்  ஆக.31ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம்  முழுவதும் கொரோனா தொற்று பீதி குறையவில்லை.  உலகத்தில் அதிகம்  பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்கா. எனவே  அங்கு நிலைமை ஆகஸ்ட் மாதத்திற்குள் சீராகுமா என்பது சந்தேகம்தான். எனவே யுஎஸ்  ஓபனில் பங்கேற்க வீரர்கள், வீராங்கனைகள் தயங்குகின்றனர்.

குறிப்பாக  உலகின் முதல் நிலை வீரர் நோவக் டிஜோகோவிக், வீராங்கனை ஆஷ்லி பார்தி, நடப்பு  சாம்பியன் ரபேல் நாடல் ஆகியோர் யுஎஸ் ஓபனில் பங்கேற்பது குறித்து தங்கள்  கவலையை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அதேபோல் உலகின் 2ம் நிலை வீராங்கனை  சிமோனா ஹலேப், ‘ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில்  மீண்டும் ஆடுகளத்திற்கு  திரும்புவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்று  கூறியுள்ளார்.
அதே நேரத்தில் அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ்,  யுஎஸ்ஓபனில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார்.

ஆனால் நடப்பு சாம்பியன்  கனடாவின் பியான்கா ஆன்ட்ரீஸ்கு எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. அதேபோல்  2முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசின்  பெட்ரா குவிதோவா, ‘  யுஎஸ் ஓபன் நடைபெற போவதற்கு காரணமானவர்களை வாழ்த்துகிறேன்.  அதே நேரத்தில்  யுஎஸ் ஓபனில் பங்கேற்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.  நியூயார்க்கில் சுகாதார நிலைமை சீராகும் என்று நம்புகிறேன். அது என் முடிவை  எளிதாக்க உதவும்’ என்று கூறியுள்ளார்.

வீரர்கள், வீராங்கனைகள் இப்படி கூறினாலும் யுஎஸ் ஓபன் போட்டியை நடத்துவதில் போட்டியை நடத்தும் அமைப்பு உறுதியாக உள்ளது.
அந்த  அமைப்பின் இயக்குநர் ஸ்டேசி அல்லஸ்டர், ‘யுஎஸ் ஓபன் போட்டி தொடங்குவதற்கு 2  அல்லது  3 வாரங்களுக்கு முன்புதான் தாங்கள் பங்கேற்பதை வீரர்கள்,  வீராங்கனைகள் உறுதி செய்வார்கள்.  ஆனால் போட்டியை நடத்த நாங்கள் தயார்.  அதற்கான திட்டம் தயாராக உள்ளது. விளையாட்டு வீரர்களும் தயாராக இருந்தால்,  அவர்கள் நியூயார்க் வருவதற்கும், பயிற்சி பெறவும், போட்டியில் பங்கேற்கவும்  தேவையானவற்றை செய்வோம்’ என்று கூறியுள்ளார்.

Tags : US Open , US Open-game players reluctant
× RELATED அபுதாபி ஓபன் காலிறுதியில் ஆன்ஸ்