×

சிட்டியூனியன் வங்கி லாபம் 5 சதவீதம் உயர்வு

சென்னை : கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி லிமிடெட்டின் 2019-2020ம் நிதியாண்டுக்கான வருடாந்திர கணக்கு முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி என்.காமகோடி நேற்று வெளியிட்டு கூறியதாவது:
வங்கியின் மொத்த வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 5 சதவீதம் உயர்ந்து ₹75 ஆயிரத்து 408 கோடியாக அதிகரித்துள்ளது. வைப்புத் தொகை 6 சதவீதம் உயர்ந்து ₹40 ஆயிரத்து 832 கோடியாகவும், கடன்கள்(அட்வான்ஸ்) கடந்த ஆண்டைவிட 5 சதவீதம் உயர்ந்து ₹34 ஆயிரத்து 576 கோடியாகவும் உள்ளது.
மேலும், வங்கியின் மொத்த வருமானம் கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 13 சதவீதம் உயர்ந்து ₹4849 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் நிகர லாபம் ₹476 கோடியாக உள்ளது.  

அதே சமயம் வங்கியின் நிகர வட்டி வருவாய் சென்ற ஆண்டைவிட 4 சதவீதம் உயர்ந்து ₹1675 கோடியாக உயர்ந்துள்ளது.
வங்கியின் நிகர மதிப்பு கடந்த ஆண்டில் இருந்த மதிப்பான ₹4808 கோடியில் இரு்ந்து உயர்ந்து ₹5253 கோடியாக உயர்ந்துள்ளது.
தற்போது கொரோனா பாதிப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, வீட்டில் இருந்தபடியே கணக்கு தொடங்கும் செயலியை(CUB Easy) அறிமுகம் செய்துள்ளோம்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக  ரிசர்வ் வங்கியின் ஒழுங்கு முறை தொகுப்பின் காரணமாக 2020 பிப்ரவரி 29 அன்று வங்கியின் நிலையான கடன்களுக்கு மாதாந்திர தவணை மற்றும் வட்டி செலுத்த கால அவகாசம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, வங்கியின் கடன் தொகை ₹125.61 கோடி வராக் கடனாக தீர்மானிக்கப்படாமல் நிலையான கணக்காக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வங்கி நடப்பு காலாண்டில் ₹125 கோடி கொரோனா பாதிப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ரிசர்வ் வங்கி பரிந்துரைக்கப்பட்ட தொகையான ₹102 கோடியை விட அதிகம். இது தவிர ஆத்ம நிர்பர் பாரத் அபியான் திட்டத்தின் மூலம் ₹780 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நிர்வாக இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.

Tags : Bank ,Citibank , citiunion bank profits rise 5 percent
× RELATED விதிகளை மீறிய வங்கிகளுக்கு அபராதம் விதித்து RBI நடவடிக்கை!!