×

ஆரணி கமண்டல நாகநதி, செய்யாற்றில் ஊரடங்கு உத்தரவை மீறி இரவு, பகலாக மணல் கொள்ளை: மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த கோரிக்கை

ஆரணி: ஆரணி கமண்டல நாகநதி மற்றும் செய்யாற்றில் இருந்து இரவு, பகலாக நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனவே, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் தேவையின்றி வெளியே சுற்றித்திரியும் நபர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், அனைத்து பகுதிகளிலும் பேரிகார்டு அமைத்து கண்காணிப்பதோடு, ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வி.நகரம்,   மொழுகம்பூண்டி,  மாமண்டூர், முள்ளிப்பட்டு, சாணார்பாளையம், ரகுநாதபுரம், தச்சூர், மோட்டூர்,  விண்ணமங்கலம், மேல்சீசமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கமண்டல நாகநதி,  செய்யாற்று படுகைகளில் இரவு, பகலாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

பகல் நேரங்களில் குவியல், குவியலாக மணலை சலித்து சேகரித்து வைத்து, இரவு நேரங்களில் ஜேசிபி இயந்திரம் மூலம் லாரி, டிராக்டர்களில் மணல் கடத்தல் படுஜோராக நடக்கிறது.    இதில் ஆரணி அடுத்த மொழுகம்பூண்டி கமண்டல நாகநதியில் தனிநபர்கள், அரசியல் பிரமுகர்கள் சிலர் ஆக்கிரமித்துக் கொண்டு, மணல் குவாரி அமைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், குவாரிகள் அமைத்துள்ள உள்ள இடத்தில் எம்சாண்ட் மணலை அதிகாரிகள் கண்டுபிடிக்காமல் இருக்க, டிராக்டரில் மணல் கடத்தி வரும் டிப்பர் வாகனங்களின் மேல் எம்சாண்ட் மணலை நிரப்பி மணல் கடத்தி செல்கின்றனர். ஆனால், கொரோனா நோய்த்தடுப்பு பணிகளை காரணம் காட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் மணல் கொள்ளையை கண்டும் காணாமலும் இருந்து வருகின்றனர்.

இதனால் இரவு, பகலாக மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள் பழுதடைந்தும், முறையான பராமரிப்பு இல்லாத வாகனங்களில் மணலை கடத்தி செல்வதால் விபத்துக்குள்ளாகி அதிகளவில் உயிர்சேதங்கள் ஏற்படுகிறது.அதேபோல், ஆரணி பகுதிகளில் தொடர் மணல் திருட்டால்   நிலத்தடி நீர்மட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டு, விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்கள் காய்ந்து வருகிறது. மேலும், பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும், சில நேர்மையான அதிகாரிகள் மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய, ரோந்து செல்லும்போது முன்கூட்டியே மணல் கொள்ளையருக்கு தகவல் கிடைத்து அவர்கள் தப்பிச்சென்று விடுகின்றனர். சில வாகனங்களை பிடித்து பறிமுதல் செய்தால்,  அரசியல் பிரமுகர்கள் உடனே அதிகாரிகளை தொடர்பு கொண்டு வாகனங்களை விடுவிக்க சொல்லி மிரட்டுகின்றனர். அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரணி- தச்சூர் சாலையில் போலீசார் ரோந்து சென்றபோது மணல் கடத்தி வந்த 3 டிராக்டரை மடக்கி பிடித்தனர். டிராக்டர்களை விடுவிக்க மணல் கொள்ளையர்களிடம் மிகப்பெரிய அளவில் பேரம் பேசப்பட்டது.

போலீசார் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால், டிராக்டர்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன மணல் கொள்ளையர்கள், போலீசார் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு டிராக்டர்களை பெற்று சென்றதாக பரபரப்பாக பேசப்படுகிறது.ஒரு சிலர் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகளின் வீடுதேடி சென்று மாமூல் கொடுத்து விடுகின்றனர். இதனால் அதிகாரிகளின் உதவியோடு மணல் கடத்தல் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது.

ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளையால் 200க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீராதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, போதிய மழை இல்லாத காரணத்தால் குடிநீர் தட்டுப்பாடு, தண்ணீர் இன்றி நெற்பயிற்கள் காய்ந்து வரும் நிலையில் இதுபோன்ற மணல் கொள்ளையால் மேலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அதனை மீறி இரவு, பகலாக நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தெருவிளக்குகளை அணைத்து மணல் கடத்தல்
ஆரணி அடுத்த எஸ்வி.நகரம் கமண்டல நாகநதியில் இருந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக டிராக்டர், மாட்டுவண்டிகளை கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனால் மணல் கடத்தி செல்வது தெரியாமல் இருக்க ஊராட்சியில் உள்ள அனைத்து தெருவிளக்குகளையும் இரவு 7 மணி முதல் விடியற்காலை 5 மணி வரை நிறுத்தி வைத்து மணல் கடத்துகின்றனர்.

அப்போது, வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கும் சைக்கிள், டூவிலர்களை திருடி செல்வதும் நடக்கிறதாம். மணல் கடத்தல் குறித்து தகவல் தெரிவித்த ஊராட்சி துணைத்தலைவரின் டூவீலரை மர்மநபர்கள் இரவில் தீ வைத்து கொளுத்தியதும் நடந்தது. இதுவரை எஸ்.வி.நகரத்தில் 10 சைக்கிள், 3 டூவீலர்கள் திருடிச்செல்லப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

கண்டுகொள்ளாத கனிமவளத்துறை அதிகாரிகள்
ஆரணி பகுதிகளில் உள்ள ஆறுகள், மதகு, ஏரி, ஓடை பகுதிகளில் இருந்து கனிமவளங்கள் அதிகளவில் சுரண்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லையாம். தொடர் கொள்ளையால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, பல்வேறு கிராமங்களில் கிணறு, ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

குண்டர் சட்டத்தில் கைது செய்தும் அடங்கவில்லை
ஆரணி பகுதிகளில் மணல் கடத்தலில்  ஈடுபடும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஆனால் 3 அல்லது 6 மாதங்களில் வெளியில் வரும் மணல் கொள்ளையர்கள் மீண்டும் தங்களது வேலையை ஆரம்பிக்கின்றனர். குறிப்பாக, ஆரணி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது  3 முறை குண்டர் சட்டம் பாய்ந்தும் அடங்காமல் மீண்டும் மணல் கடத்தலில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

Tags : Cherkayadu ,Arani Kamandala Naganathi ,district administration ,administration ,stop ,District ,Saikkady , Arani Kamandala Naganathi, Saikkady violating curfew, night and day sand burglary,District administration demands stop
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்