புதுடெல்லி : எல்லை பிரச்னையில் சீனாவுடனான மோதலை தொடர்ந்து பிஎஸ்என்எல் 4ஜி டெண்டரை மாற்றி அமைக்கவும், 4ஜி திட்டத்துக்கு எந்த சீன தயாரிப்பு கருவிகளையும் பயன்படுத்த வேண்டாம் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்திய எல்லையான லடாக் கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய - சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். இதன் எதிரொலியாக சமூக வலைத்தளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அத்துடன் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் எனவும், சீன செயலிகளை பயன்படுத்தக்கூடாது எனவும் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம், தனது 4ஜி அலைவரிசை விரிவாக்கத்தில் சீன கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது..
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
பாதுகாப்பு பிரச்னைகள் இருப்பதால் சீன உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம். இதுதொடர்பாக டெண்டரை மாற்றி அமைக்க வேண்டும். சீன நிறுவனங்களால் தயாரிக்கப்படும் உபகரணங்களை பயன்படுத்துவதை குறைக்க தனியார் நிறுவன ஆப்ரேட்டர்களைக் கேட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது தற்போதைய நெட்வொர்க்குகளில் ஹவாய் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.அதேநேரத்தில் இசட்இஇ அரசு நடத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. லடாக்கில் பெரும் பதற்றத்திற்கு மத்தியில் அரசு இத்தகைய முடிவை எடுத்து உள்ளது. சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட சாதனங்களின் நெட்வொர்க் பாதுகாப்பு எப்போதும் சந்தேகத்திற்குரியது.
இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவின் ஐந்து சிறந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் நான்கு (சியோமி, விவோ, ரியல்மே மற்றும் ஒப்போ) சீனாவைச் சேர்ந்தவை. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட ஸ்மார்ட்போன்களில் கிட்டத்தட்ட 76 சதவீத பங்கை மேற்கண்ட ஸ்மார்ட் போன் பிராண்டுகள் கொண்டுள்ளன. தென் கொரியாவின் சாம்சங், மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே காலாண்டில் ஏற்றுமதியில் 15.6 சதவீத பங்கைக் கொண்டுள்ளது, முதல் ஐந்து எண்ணிக்கையில் சீன அல்லாத ஒரே நிறுவனமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.