×

மதுரையில் இருந்து சேலம் சென்ற சரக்கு ரயிலில் 20 பெட்டிகள் நடுவழியில் திடீர் துண்டிப்பு: கரூர் அருகே பரபரப்பு

கரூர்: மதுரையில் இருந்து சேலம் நோக்கி சென்ற சரக்கு ரயில் கரூர் ரயில் நிலையம் அருகே வந்த போது இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டு 20பெட்டிகள் பாதியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் இருந்து சரக்கு ரயில், டிராக்டர்களை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்றது. நேற்று காலை 7 மணியளவில் கரூர் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அமராவதி ரயில்வே பாலத்தை கடந்து ரயில் நிலையம் நோக்கி வந்த போது திடீரென இன்ஜின் பகுதியில் இருந்து இரண்டு பெட்டிகள் தள்ளி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதில் 20 பெட்டிகள் பாதியிலேயே நின்றன. இன்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள் கொண்ட பகுதி ரயில் நிலையம் நோக்கி வந்து நின்றது. இதனால் கரூர் ரயில் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் பாதிக்கப்பட்ட ஒரு பெட்டியை மட்டும் தனியாக கழற்றி வைத்து விட்டு இன்ஜினுடன் மற்ற பெட்டிகளை இணைத்தனர். இரண்டு மணி நேரம் கழித்து காலை 9 மணிக்கு கரூர் ரயில்வே நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் சேலம் நோக்கி புறப்பட்டு சென்றது.

Tags : disruption ,Salem ,Madurai , 20 boxes, Madurai-Salem, freight train
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...