×

ராமநாதபுரம் அருகே சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் உடல் அடக்கம்

தொண்டி: இந்திய - சீன எல்லைப்பகுதியான லடாக்கில், இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே நடந்த மோதலில், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா கடுக்கலூரை சேர்ந்த காளிமுத்து மகன் ராணுவ வீரர் பழனி (40) வீரமரணம் அடைந்தார். இவரது உடல் நேற்று முன்தினம் இரவு ராணுவ விமானம் மூலம் மதுரை வந்தது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் முலம் நேற்று அதிகாலை 2 மணிக்கு தொண்டிக்கு வந்தது. பின்னர் ஆம்புலன்சிலிருந்து அவரது உடலை ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக, கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடுக்கலூர் கொண்டு வந்தனர்.

அங்கு கலெக்டர் வீரராகவ ராவ், சப்-கலெக்டர் சுகபுத்ரா, எஸ்பி வருண்குமார் உட்பட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து பழனியின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முப்படை அதிகாரிகள், உயரதிகாரிகள், அரசியல் கட்சியினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மீண்டும் பழனியின் உடல் ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதைதொடர்ந்து பழனிக்கு சொந்தமான இடத்தில் ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கலெக்டர் வீரராகவ ராவ், தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சத்தை பழனியின் மனைவி வானதி தேவியிடம் வழங்கினார்.

பழனி குடும்பத்தினர் ராமநாதபுரம் அருகே கழுகூரணியில் புது வீடு கட்டி சமீபத்தில் கிரகப்பிரவேசம் செய்தனர். இந்த புதிய வீட்டை கூட பழனி பார்க்கவில்லை. இவருக்கு பிரசன்னா (10) என்ற மகனும், திவ்யா (8) என்ற மகளும் உள்ளனர். சிறு வயது முதல் சிறந்த சமூக அக்கறை கொண்டவர். அனைவரும் கட்டாயம் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என கூறுவார் என கிராம மக்கள் தெரிவித்தனர். தனது கிராமத்தில் இருந்து அதிகமான இளைஞர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று விருப்பப்பட்டுள்ளார்.

பழனியின் தந்தை காளிமுத்து கூறுகையில், ‘‘எனது இரு மகன்களையும் நாட்டை பாதுகாக்க அனுப்பினேன். மூத்த மகன் நாட்டிற்காக உயிர் நீத்தது மிகவும் பெருமையாக உள்ளது. இந்த தியாகத்தை நினைவுகூரும் வகையில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும்’’ என்றார். பழனியின் தம்பி ராணுவ வீரர் இதயக்கனி கூறுகையில், ‘‘எனது அண்ணன் 20 வருடங்களுக்கு மேலாக ராணுவத்தில் வேலை பார்த்தார். அவரது பேச்சால்தான் நாமும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது’’ என்றார். திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் பழனியின் குடும்பத்தாருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்தார்.


ஆயுதத்தால் மண்டை பிளப்பு
பழனியின் உறவினர் நாச்சியப்பன் கூறுகையில், முதலில் குண்டடி பட்டதாகத்தான் தகவல் வந்தது. திறந்து பார்த்தால் தலையில் மிகப்பெரிய ஆயுதம் கொண்டு அடித்து மண்டை பிளக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து விட்டோம். தலைப்பகுதி சிதைந்திருக்கிறது. ஆயுதங்களால் பழனியை சீனப்படையினர் தாக்கியது அடங்காத கோபத்தை அளிக்கிறது என்றார்.



Tags : Soldier ,hometown ,Ramanathapuram Ramanathapuram Kneel 21 Home Shells Burial , Hometown near Ramanathapuram Kneel 21 shells Burial of a soldier
× RELATED ராணுவ வீரர் மாயம்