×

தொழிற்சாலை விரிவுபடுத்தும் பணிக்கும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கும் தொடர்பு இல்லை

சென்னை:  தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 29.5 ஹெக்டர் பரப்பு ஏரியும் மற்றும் அதனை சுற்றியுள்ள 5 கி.மீ. நிலப்பரப்பில் உள்ள தனியார் பட்டா நிலங்கள் மற்றும் வருவாய்த்துறை நிலங்களை உள்ளடக்கியதாகும். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அனைத்து சரணாலயங்களையும் மைய பகுதி, இடைநிலை பகுதி மற்றும் சூழல்சார் பகுதி என முறைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

அதன்படி, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரியை சுற்றியுள்ள 5 கி.மீ. நிலப்பரப்பினை 0-1 கி.மீ. தூரம் மைய பகுதி எனவும், 1-3 கி.மீ. தூரம் இடைநிலை பகுதியாகவும், 3-5 கி.மீ. பகுதியை சூழல்சார் பகுதி ஆகவும் முறைப்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 5 கி.மீ. சுற்றளவு பகுதி எந்த குறைபாடும் இல்லாமல் பறவைகள் நிர்வாக பகுதியாகவே தொடரும்.மேலும் தனியார் நிறுவனத்திற்கு உதவி செய்வதற்காக வனத்துறை சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்ற செய்தியை சில நாளேடுகள் செய்திகளாக வெளியிட்டுள்ளது. மேற்கண்ட தொழிற்சாலையை விரிவுபடுத்தும் பணிகளுக்கும், சரணாலயத்தை முறைப்படுத்தும் பணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு 1 வனச்சரகர், 1 வனவர், 1 வனக்காப்பாளர், 5 வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் தொடர்ந்து பணியாற்றி ஏரியின் கரையை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.ஆண்டுதோறும் சராசரியாக 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பறவைகள் வேடந்தாங்கல் ஏரிக்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொரித்து செல்கின்றன.

மாசுகட்டுப்பாட்டு வாரியத்தை பொறுத்தவரை, சில பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்ட தனியார் நிறுவனம் 1993ம் ஆண்டில் இருந்து செயல்படும் மருந்து நிறுவனமாகும். இந்நிறுவனம் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய அனுமதியுடன் மற்றும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் வனத்துறை பற்றியும், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தை பற்றியும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சம்பந்தமாக கடந்த சில தினங்களாக வந்த செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : factory ,Vedanthangal Bird Sanctuary ,Vedantangal ,The Sanctuary , Work on expanding the factory Vedantangal birds The sanctuary has no connection
× RELATED ஐசிஎப் தொழிற்சாலையில் பயங்கர தீ