கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு சென்னையில் ஒரே நாளில் 3 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு

சென்னை: கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பை தொடர்ந்து சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் மட்டும் 3 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். உயிருக்கு பயந்து அவர்கள் பைக், கார், லாரிகளில் பறந்தனர். இதனால், சென்னையில் நேற்று மாலை முதல் முக்கிய சாலைகள் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையை பொறுத்தவரை தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சென்னை, காஞ்சி, செங்கை, திருவள்ளூரில் இன்று முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பை தொடர்ந்து சென்னையில் உள்ள வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.

கடந்த 3 நாட்களாக சென்னையில் வசிக்கும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு மோட்டார் சைக்கிள், கார், லாரி உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். நேற்று சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சென்றவர்கள் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தது. இதனால், செங்கல்பட்டு டோல்கேட்டில் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு படையெடுத்து நின்றன. டோல்கேட்டை கடக்கவே பல மணி நேரம் ஆனது. இ-பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டுமே முதலில் சென்னையில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கட்டுக்கடங்காத கூட்டத்தை தொடர்ந்து பாஸ் இல்லாதவர்கள் கூட ெவளியூர் செல்ல அனுமதிக்கப்பட்டனர். சிலர் செங்கல்பட்டு டோல்கேட் வரை ஒரு வாகனத்தில் வந்தனர். அதன் பிறகு நடந்தே டோல்கேட்டை கடந்து, பின்னர் வேறு வாகனத்தை பிடித்து புறப்பட்டு சென்ற காட்சியை காண முடிந்தது. ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வீடுகளில் பொருட்களை காலி செய்தும் புறப்பட்டனர். உயிருக்கு பயந்து கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பைக், கார், லாரிகளில் புறப்பட்டு சென்றனர். நேற்று காலை முதல் இரவு வரை சுமார் 3 லட்சம் பேர் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்றனர்.

முதல் முறையாக கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட அன்றே சென்னையில் வசிக்கும் மக்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். சென்னையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த, அதே வேளையில் மக்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். மார்ச் 24ம் தேதி முதல் இது வரை 20 லட்சம் பேர் பயணம் செய்தாக கூறப்படுகிறது. விதிகள் தளர்த்தப்பட்டிருந்தால் இன்னும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இன்னும் 15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராக இருந்து வருகின்றனர். கெடுபிடி பயத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது.

சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் படையெடுப்பால் சென்னையில் நேற்று மாலை முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முக்கிய சாலைகளில் ஆட்கள் நடமாட்டம் என்பது விரல் விட்டு எண்ணும் அளவுக்கே இருந்தது. இதனால்,  ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடிந்த காட்சியை காண முடிந்தது.

உயிர் தான் முக்கியம்

சொந்த ஊர்களுக்கு புறப்பட்டவர்கள் கூறுகையில், “சென்னையில் புயல், மழை போன்ற கடுமையான இயற்ைக சீற்றங்கள் ஏற்பட்ட போதும் கூட பயம் இல்லாமல் சென்னையில் வசித்து வந்தோம். தற்போது கொரோனா பாதிப்பு ஒவ்வொருவரையும் ஆட்டி படைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். நோய் எந்த வழியில் வருகிறது என்று தெரிந்தால் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.

ஆனால், எந்த வழியில் வருகிறது. யாருக்கு எப்போ பாதிப்பு வருமோ? என்று தெரியாத நிலை இருந்து உள்ளது. அது மட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு உள்ளவர்களை கண்டுப்பிடிப்பது என்பது கடினமாக உள்ளது. இதனால் சென்னையில் வசிப்பவர்கள் ஒவ்வொருவரிடம் பயத்துடன் தான் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். உடல் நலத்துடன் இருந்தால் தான் சம்பாதிக்க முடியும். அதனால் தான் சொந்த ஊர்களுக்கு செல்கிறோம். நிலைமை சரியான பிறகு வாழ வைக்கும் சென்னைக்கு மீண்டும் வருவோம்” என்றனர்.

Related Stories: