×

சென்னையில் உள்ள கொரோனா வார்டில் பணியாற்ற 3,000 செவிலியர்கள் வரவழைப்பு

சென்னை: தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரம் செவிலியர்கள் நேற்று சென்னைக்கு வரவழைத்துள்ளனர். அவர்களை சென்னையில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பணியமர்த்த முடிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இதுவரை 35,556 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 461 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னையில் 70.8 சதவீதம் ஆகும்.

ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை மண்டலங்களில் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. சென்னையில் இதுவரை 461 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 19,027 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 16,067 சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை ஆண்கள் 60.20 சதவிகிதத்தினரும், பெண்கள் 39.79 சதவிகிதத்தினரும், திருநங்கைகள் 0.01 சதவிகிதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவலை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்தாலும், சென்னையில் கொரோனா பரவலை தடுக்க முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். இதற்கிடையில் ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் இருந்து 120க்கும் மேற்ப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு நடமாடும் மருத்துவ குழு அமைக்கப்பட்டு வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களில் சென்னையில் பணிபுரிந்த செவிலியர்கள் 155க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் பிற மாவட்டங்களில் இருந்து சென்னையில் கொரோனா சிகிச்சையில் பணியாற்ற கூடுதலாக 3,000 செவிலியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகர்கோவில், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலமாக 2,000 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : nurses ,Chennai ,ward ,Corona , 3,000 nurses recruited to work in Corona ward in Chennai
× RELATED டிஎம்எஸ் வளாகத்தில் நர்சுகள் போராட்டம்