×

மறைந்த இன்ஸ்பெக்டருக்கு திருவள்ளூர் மாவட்ட போலீசார் மவுன அஞ்சலி

திருவள்ளூர் :சென்னை மாம்பலம் போலீஸ் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பாலமுரளி (47). கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். பின்னர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ரூ.2.25 லட்சம் செலவில் மருந்துகளை வரவழைத்து இவருக்கு சிகிச்சை அளிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உதவினார். எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து அவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.  பாலமுரளி மரண செய்தி கேட்டு காவல்துறையே சோகத்தில் மூழ்கியது.
பாலமுரளி திருவுருவப்படத்திற்கு நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட போலீசார் மலர் தூவி மரியாதை செய்தனர். இந்நிலையில், மறைந்த இன்ஸ்பெக்டருக்கு மாலை 5 மணிக்கு தமிழகம் முழுவதும் போலீசார் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு மாநில காவல்துறை கேட்டுக்கொண்டது.

அதன்படி திருவள்ளூர் போலீசார் ஆங்காங்கே பணிபுரிந்த இடத்திலிருந்தே, மறைந்த சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளிக்கு, நேற்று மாலை 5 மணிக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.


Tags : Thiruvallur District Police ,Inspector , Thiruvallur District Police silent tribute to the late Inspector
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு